ADDED : டிச 17, 2024 05:06 AM

பெலகாவி: மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் குஷாலப்பா கேள்விக்கு பதிலளித்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:
காவிரி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் உட்பட, பல்வேறு வழிகளில் கழிவு நீர் கலப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஏற்கனவே இரண்டு முறை, ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
நடப்பாண்டு ஜூலை மாதம், மைசூரு பகுதியில் பாயும் காவிரி ஆற்றுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதை தடுக்க தேவையான சிபாரிசுகளையும் செய்துள்ளனர். கர்நாடக மாசுக் கட்டுப்பாடு ஆணைய அதிகாரிகளிடமும் தகவல் கேட்டறிந்துள்ளனர். அனைத்து தகவல்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கை அடிப்படையில், காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பாக, காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள், உள்ளாட்சி இயக்குனரகம், காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன், கிராம வளர்ச்சி உட்பட, சம்பந்தப்பட்ட துறைகளுடன், ஆலோசனை நடத்தி திட்டம் வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

