காங்.,கில் குழப்பம் அதிகரிப்பதால் தொண்டர்கள் விரக்தி!: டில்லி மேலிடத்திலும் உருவானது இரண்டு கோஷ்டி
காங்.,கில் குழப்பம் அதிகரிப்பதால் தொண்டர்கள் விரக்தி!: டில்லி மேலிடத்திலும் உருவானது இரண்டு கோஷ்டி
ADDED : ஜூலை 02, 2024 06:38 AM
பெங்களூரு: கர்நாடக காங்கிரசில், முதல்வர், துணை முதல்வர் விவாதம் அனல் பறக்கிறது. இந்த விவகாரத்தில், டில்லி மேலிடத்திலேயே, இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளன. கட்சியில் நடக்கும் குழப்பங்களை கண்டு, தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் பதவி வகிக்கிறார். கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், எந்த இடையூறும், முட்டுக்கட்டை இல்லாமல் அரசு நடக்கும் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது.
நெருக்கடி
சில மாதங்களாகவே, முதல்வர் மாற்றம் குறித்து அமைச்சர்கள் இடையே, சர்ச்சை நடந்து வருகிறது. இதற்கிடையே துணை முதல்வர் பதவி மீது சில அமைச்சர்கள் கண் வைத்துள்ளனர். மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்கும்படி, மேலிடத்தை இம்சிக்கின்றனர்.
லிங்காயத், தலித், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, ஜமீர் அகமது கான், எம்.பி.பாட்டீல், ராஜண்ணா உட்பட சிலர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு முன், இது குறித்து அமைச்சர்கள் பகிரங்கமாக பேசியதால், முதல்வரும், துணை முதல்வரும் அதிருப்தி அடைந்தனர். மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மேலிடமும் தேவையின்றி முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி பேசாமல், தேர்தலுக்கு தயாராகுங்கள் என, உத்தரவிட்டது.
அதன்பின் அமைச்சர்களின் குரல், ஓரளவு குறைந்தது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில், அமைச்சர்கள் ஒவ்வொருவராக வாயை திறக்க துவங்கினர். லோக்சபா தேர்தலில் கட்சி எதிர்பார்த்த அளவில், வெற்றி பெறவில்லை. எனவே முதல்வரை மாற்ற வேண்டும். கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் எரிச்சல் அடைந்த துணை முதல்வர் சிவகுமார், 'அமைச்சர்கள் வாயை மூடி கொண்டிருப்பது நல்லது. இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார்.
ஆனால் அமைச்சர் ராஜண்ணா, பொருட்படுத்தவில்லை. 'ஒழுங்கு நடவடிக்கை எடுக்கட்டும்' என, சவால் விடுக்கிறார். இவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி மீது, ஆசை வந்துள்ளது. தன்னை மாநில தலைவராக்கினால், அமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறி, சிவகுமாரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.
கர்நாடக காங்கிரசில், தற்போது சித்தராமையா கோஷ்டி, சிவகுமார் கோஷ்டி என, இரண்டு கோஷ்டிகள் உள்ளன. சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சித்தராமையாவுக்கு ஆதரவாக, சிலர் சிவகுமாருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
லோக்சபா தேர்தல் பின்னடைவை காரணம் காண்பித்து, சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்கிவிட்டு, சிவகுமாருக்கு முதல்வர் பட்டம் கட்ட முயற்சிக்கின்றனர். இதை உணர்ந்த சித்து ஆதரவு கோஷ்டி, கூடுதல் துணை முதல்வர்களை கொண்டு வந்து, சிவகுமாரை, 'டம்மி' யாக்க திட்டம் தீட்டியுள்ளது.
இதற்கிடையில் இவரிடம் உள்ள மாநில தலைவர் பதவியை பறிக்க, முதல்வர் சித்தராமையா திரைமறைவில் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அவரது பதவியை பறித்தால் தன் முதல்வர் நாற்காலிக்கு ஆபத்து ஏற்படாது என்பது, சித்துவின் எண்ணமாகும்.
மோதல்
இதே விஷயமாக, சித்து, சிவகுமார் கோஷ்டி இடையிலான மோதல், நாளுக்கு நாள் வலுவடைகிறது. இந்த விஷயம் டில்லி மேலிடத்தின் கவனத்துக்கு சென்றுள்ளது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் மேலிடத்திலும், இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளது.
ஒரு கோஷ்டி சித்தராமையாவுக்கு ஆதரவாகவும், மற்றொன்று சிவகுமாருக்கு ஆதரவாகவும் நிற்கிறது. ஜூன் 29ம் தேதி மாலை, முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் மஹாதேவப்பா, பரமேஸ்வர், ஜார்ஜ் ஆகியோருடன், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்தார்.
அப்போது அமைச்சர்களை வெளியே அனுப்பி விட்டு, ராகுலுடன், சித்தராமையா சிறிது நேரம் ரகசிய ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர் பதவி உட்பட சில பதவிகளை மாற்றுவது குறித்து, இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அன்று பிரதமர் மோடியை சந்தித்த பின், சித்தராமையா பெங்களூரு திரும்பி விட்டார். சிவகுமார் டில்லியிலேயே தங்கியிருந்தார். மறுநாள் காலை, இவர் தனியாக சென்று, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
'பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் முடியும் வரை, நீங்களே மாநில தலைவராக இருங்கள்' என, சிவகுமாருக்கு, கார்கே உத்தரவிட்டதாக தெரிகிறது.
சிவகுமாரிடம், பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனம் என்ற இரண்டு முக்கியமான துறைகள் உள்ளன. துணை முதல்வர், மாநில தலைவர் என கட்சி, அரசு என இரண்டிலும் முக்கிய பதவி வைத்துள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்பது, காங்கிரசின் கலாசாரம். எனவே மாநில தலைவர் பதவியை விட்டு தரும்படி, மேலிடம் மூலமாக சிவகுமாருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஆலோசனை
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமையும் போது, லோக்சபா தேர்தல் வரை மாநில தலைவராக இருக்கும்படி, மேலிடம் உத்தரவிட்டது. தேர்தல் முடிந்ததால், பதவியை வேறு ஒருவருக்கு விட்டுத்தர வேண்டும் என, சில அமைச்சர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.
இந்த விஷயத்தில் சித்துவுக்கு ஆதரவாக, ராகுலும், சிவகுமாருக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன் கார்கேவும் நிற்கின்றனர். சித்தராமையா, சிவகுமார் என, இருவருமே கர்நாடக காங்கிரசின் முக்கியமான தலைவர்கள். இருவரையும் அலட்சியப்படுத்த முடியாது.
எனவே இவர்கள் ஒருமித்த கருத்துடன் சிபாரிசு செய்யும் தலைவரை, மாநில தலைவராக நியமித்து, குழப்பத்துக்கு முடிவு கட்ட மேலிட தலைவர்கள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது காங்கிரசில் முதல்வர், துணை முதல்வர் பதவிக்காக அமைச்சர்கள் முட்டி மோதுவது, தொண்டர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. 'மாநில மக்கள் 135 தொகுதிகளை கொடுத்து, பெரும்பான்மையுடன் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினர்.
மக்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினால், கட்சிக்கும், அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். அதை விட்டு விட்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கேலிப் பொருளாகின்றனர்' என, தலைவர்கள் மீது, தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.