திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த செந்தூரன்: வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்!
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த செந்தூரன்: வெற்றிவேல், வீரவேல் கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்!
ADDED : அக் 27, 2025 05:38 PM

தூத்துக்குடி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாகசாலையுடன் தொடங்கியது. விழாவின் சிகர நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் பூஜை ஆரம்பமாகியது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனையும் 12:45 மணிக்கு மேல் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடந்தது.
பின்னர் மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், 'வெற்றிவேல், வீரவேல் முருகனுக்கு அரோகரா' என கோஷமெழுப்பினர்.
சூரபத்மனை சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். சம்ஹாரம் முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு, சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
சூரசம்ஹாரத்தை ஒட்டி இந்த ஆண்டு மக்களின் பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட 4000 போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன, மேலும் 2 ட்ரோன் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 20 மருத்துவர்கள் மற்றும் 50 செவிலியர்கள் மருத்துவ உதவிக்காக பணியாற்றினார்கள். அவசர சிகிச்சைக்காக 14 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
சூரசம்ஹாரம் ஏன்
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர்.
சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும், என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர்.
அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார் சிவன். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

