திமுக தான் ஆட்சி அமைக்கும்... இதை நான் சொல்லல... மக்கள் பேசிக் கொள்கிறார்கள்: ஓபிஎஸ்
திமுக தான் ஆட்சி அமைக்கும்... இதை நான் சொல்லல... மக்கள் பேசிக் கொள்கிறார்கள்: ஓபிஎஸ்
ADDED : அக் 27, 2025 04:02 PM

காளையார்கோவில்; எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பதால் மீண்டும் திமுகவுக்கு வாய்ப்பு என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக்கவசத்தை ஓபிஎஸ் வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறாரே என்று நிருபர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் அளித்த பதில் பின்வருமாறு;
இன்றைய சூழ்நிலையில் எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது அதிமுக பிரிந்து கிடக்கிறது, பாமக பிரிந்து கிடக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அவர்களுக்கு(திமுகவை குறிப்பிடுகிறார்) தான் வாய்ப்பு இருக்கிறது. இது கண்கூடாக தெரிகிறது.
திமுகவுக்கு ஏன் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் இல்லையா? எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. பிரிந்து இருக்கும் போது அவருக்கு(ஸ்டாலின்) வாய்ப்பு இருக்கிறது என்று பொதுமக்கள் பேசுகின்றனர், நான் பேசவில்லை. என் மீது பழியை போடாதீர்கள்.
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நலன் கருதி எடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னமும் 6 மாதங்கள் இருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து அனுதாபம் தெரிவித்து இருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

