தியேட்டர் முன் ஆடு பலியிட்ட நடிகர் பாலைய்யா ரசிகர்கள் கைது
தியேட்டர் முன் ஆடு பலியிட்ட நடிகர் பாலைய்யா ரசிகர்கள் கைது
ADDED : ஜன 19, 2025 02:33 AM

திருப்பதி, திருப்பதியில் தெலுங்கு நடிகர் பாலைய்யா எனப்படும் பாலகிருஷ்ணா வின் படம் வெளியான திரையரங்கு முன், ஆட்டை பலியிட்டு அதன் ரத்தத்தால் போஸ்டருக்கு அபிஷேகம் செய்த ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள், அந்த நடிகரின் கட் அவுட்டை பிரமாண்டமாக வைத்து, அதற்கு கிரேனில் மாலை போட்டு, பால் அபிஷேகம் செய்து, கையில் சூடம் ஏற்றி வழிபடாத குறையாக கொண்டாடுவர்.
தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடிப்பது, நடிகரைப் போன்றே வேடம் அணிந்து வருவது என ரகளையில் ஈடுபடுவர்.
ஆந்திராவில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் இவற்றை மிஞ்சும் வகையில், தியேட்டர் முன் ஆட்டை பலியிட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவர், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, இவரது மைத்துனர்.
பாலகிருஷ்ணா, நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் நடித்துள்ள டாகு மகாராஜ் படம், மகர சங்க ராந்தியை ஒட்டி சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸ் ஆனது.
திருப்பதியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் ரிலீஸ் அன்று அதிகாலை முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது ஆடு ஒன்றை கட்டி இழுத்து வந்த சில ரசிகர்கள், கூட்டத்திற்கு மத்தியில் அதை அரிவாளால் வெட்டினர்.
பின் அதன் ரத்தத்தை சேகரித்து, அங்கிருந்த நடிகர் பாலகிருஷ்ணா போஸ்டர் மீது ஊற்றினர்.
இதை, சுற்றியிருந்த ரசிகர்கள் விசிலடித்தும், கூச்சலிட்டும் வரவேற்றனர். விலங்கு நல அமைப்பான பீட்டா, இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்தது.
இதன்படி தியேட்டர் முன் ஆட்டை பலியிட்ட சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத், முகேஷ் பாபு ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.