sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!

/

தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!

தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!

தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகரை கொன்ற வழக்கில் நடிகர் தர்ஷன் கைது!

1


ADDED : ஜூன் 12, 2024 12:23 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : தன் தோழிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய, ரசிகரை கொடூரமாக தாக்கி கொன்று, உடலை சாக்கடை கால்வாயில் வீசிய வழக்கில், பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, சும்மனஹள்ளி பகுதியில், அனுகிரஹா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருப்பை ஒட்டி சாக்கடை கால்வாய் ஓடுகிறது. கடந்த 9ம் தேதி காலை 8:00 மணிக்கு, கால்வாய்க்குள் இருந்து வெளியே வந்த தெருநாய்கள், மனிதனின் கையை வாயில் கவ்வியபடி வந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சாக்கடை கால்வாய்க்குள் எட்டி பார்த்த போது, உடல் முழுதும் பலத்த காயத்துடன் ஒருவர் இறந்து கிடந்தார். காமாட்சிபாளையா போலீசார் அங்கு சென்று, அந்த நபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபரை யாரோ கொன்று, உடலை கால்வாயில் வீசியது தெரிந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்திற்கு சென்ற மூன்று பேர், சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தது, சித்ரதுர்கா டவுன் லட்சுமி வெங்கடேஸ்வரா லே - அவுட்டின் ரேணுகா சாமி, 33 என்றும், பணத்தகராறில் அவரை கொன்று, உடலை கால்வாயில் வீசினோம் என்றும் கூறி சரண் அடைந்தனர்.

அதிகாரிகள் ஆலோசனை


சரண் அடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார், மூன்று பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நடிகர் தர்ஷன், 47 கூறியதால், ரேணுகாசாமியை அடித்து கொன்றதாக, மூன்று பேரும் தெரிவித்தனர். இதையடுத்து தர்ஷனை கைது செய்வது குறித்து நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா தலைமையில், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ள, தர்ஷன் மைசூரு சென்றிருப்பது தெரிந்தது.

நேற்று முன்தினம் இரவே, காமாட்சிபாளையா போலீசார் மைசூரு சென்றனர். பிரபல ஹோட்டலில் தங்கி இருந்த தர்ஷன், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று இருந்தார். உடற்பயிற்சி முடித்த பின் வெளியே வந்த அவரை, போலீசார் கைது செய்தனர். மைசூரில் இருந்து பெங்களூருக்கு, போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார்.

2வது மனைவி?


ரேணுகாசாமி கொலை குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

நடிகர் தர்ஷனுக்கு கடந்த 2000வது ஆண்டு, விஜயலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். தர்ஷனுக்கும், நடிகையும், மாடலுமான பவித்ரா கவுடா இடையில், பல ஆண்டுகளாக நட்பு உள்ளது. நெருக்கமான புகைப்படங்களும் எடுத்து உள்ளனர். பவித்ராவை, தர்ஷனின் இரண்டாவது மனைவி என்றும் சொல்வது உண்டு.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தர்ஷனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பவித்ரா கவுடா, 'ஒரு தசாப்தம் முடிந்து விட்டது. இன்னும் தொடரலாம், நன்றி' என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். தர்ஷனின் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராமிற்கு, தர்ஷனின் ரசிகரான ரேணுகாசாமி தொடர்ந்து, ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதுபற்றி பவித்ரா தனது உதவியாளரான, வினய் என்பவரிடம் கூறி உள்ளார்.

ரேணுகாசாமி சித்ரதுர்காவை சேர்ந்தவர் என்று அறிந்த வினய், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ரகுவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

காரில் கடத்தல்


ரேணுகாசாமியை கண்டிக்கும்படி தெரிவித்து உள்ளார். கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை சந்தித்த ரகு, பவித்ரா கவுடாவிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதையடுத்து, அவரை பெங்களூரு ஆர்.ஆர்.நகருக்கு, காரில் கடத்தி வந்தார்.

ஆர்.ஆர்.நகர் பட்டனகெரேயில் உள்ள, ஷெட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து ரேணுகாசாமியை, வினய், ரகு, தர்ஷனின் மேலாளர் நாகராஜ், தர்ஷன் ஆதரவாளர்கள் லட்சுமண், தீபக்குமார், நந்தீஷ், கார்த்திக், நிகில் நாயக், கேசவமூர்த்தி, 'பவுன்சர்'கள் பிரதோஷ், பவன் ஆகிய 11 பேரும் தாக்கி உள்ளனர்.

அந்த நேரத்தில் ஷெட்டிற்கு தர்ஷனும், பவித்ரா கவுடாவும் வந்து உள்ளனர். ரேணுகாசாமியிடம் சென்ற தர்ஷன், 'எதற்காக பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்புகிறாய்' என்று கேட்டு உள்ளார். 'நான் உங்கள் தீவிர ரசிகர். உங்களுக்கும், உங்கள் மனைவி விஜயலட்சுமிக்கு நடுவில், பவித்ரா கவுடா வருவது எனக்கு பிடிக்கவில்லை. இதனால், அவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பினேன்' என்று கூறி உள்ளார்.

இதை கேட்டு கோபம் அடைந்த தர்ஷன், 'என் விஷயத்தில் தலையிட நீ யார்' என்று கேட்டு, தான் அணிந்திருந்த பெல்டால், ரேணுகாசாமியை தாக்கியதுடன், மர்ம உறுப்பில் மிதித்தும் உள்ளார். அதன்பின்னர் தர்ஷனின் ஆதரவாளர்கள், பவுன்சர்கள் தொடர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியதில், ரேணுகாசாமி இறந்துள்ளார். அவரது உடலை காமாட்சி பாளையாவுக்கு காரில் எடுத்து சென்று, சாக்கடை கால்வாயில் வீசியது தெரிந்தது.

15 இடங்களில் காயம்


கொலை நடந்த இடம் அன்னபூரனேஸ்வரி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், வழக்கு விசாரணை அங்கு மாற்றப்பட்டது. தர்ஷன், பவித்ரா கவுடாவிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. 'ரேணுகாசாமிக்கு அறிவுரை மட்டும் தான் கூறினோம். அவரை தாக்கவில்லை' என்று, தர்ஷனும், பவித்ரா கவுடாவும் கூறி உள்ளனர்.

ஆனால் கைதான 11 பேரும், 'ரேணுகாசாமியை, தர்ஷனும் தாக்கினார். ரேணுகாசாமி இறக்கும் வரை, அங்கு தான் இருந்தார்' என்று கூறினர். இதையடுத்து தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேர் மீதும், அன்னபூரனேஸ்வரி நகர் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பவித்ரா கவுடா ஏ 1, தர்ஷன் ஏ 2வாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில் ரேணுகாசாமி பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று மாலை வெளியானது. உடலில் 15 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், மர்ம உறுப்பில், கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

6 நாள் காவல்


கைதான தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேரையும், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு, நேற்று மாலை 6:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் கவுடா முன், 13 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்ஷன் உட்பட 13 பேரையும் ஆறு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டார்.

தர்ஷனுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் கைதாகி இருப்பதால், ரசிகர்கள் எதுவும் பிரச்னை செய்யக்கூடாது என்பதால், மாநிலம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ரேணுகாசாமி கொலை, தர்ஷன் கைது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனிடம் இருந்து, முதல்வர் சித்தராமையா தகவல் பெற்றுக் கொண்டார்.

மறைந்த நடிகர் அம்பரீஷ் குடும்பத்திற்கு, நடிகர் தர்ஷன் மிகவும் நெருக்கமானவர். அம்பரீஷ் மனைவியான முன்னாள் எம்.பி., சுமலதாவை, தர்ஷன் அம்மா என்றே அழைப்பார். தர்ஷன் தனக்கு இன்னொரு மகன் என்றும், சுமலதா பல முறை கூறியது உண்டு. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதாவை வெற்றி பெற வைத்ததில், தர்ஷனின் பங்கு உண்டு.

சுமலதாவுக்காக இரவு, பகல் பாராமல் பிரசாரம் செய்தார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமணேகவுடா, தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுனை ஆதரித்து தர்ஷன் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா கவுடாவுடனான தொடர்பை கேள்வி கேட்டதால், கடந்த 2011ம் ஆண்டு மனைவி விஜயலட்சுமியை, தர்ஷன் தாக்கினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் 14 நாட்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், மனைவி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

கடந்த 2016ல் தன்னை துன்புறுத்துவதாக தர்ஷன் மீது, மனைவி விஜயலட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். தர்ஷனிடம் விசாரணை நடத்தி அனுப்பினர். 2021ல் மைசூரில் ஹோட்டல் ஊழியரை, தர்ஷன் தாக்கினார். பிரச்னை பெரிதானதால் ஊழியருக்கு 50,000 ரூபாய் கொடுத்து செட்டில் செய்தார். தர்ஷன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, 2022ல் கன்னட திரைப்பட இயக்குனர் பரத் போலீசில் புகார் செய்தார்.

மைசூரு டி.நரசிப்பூர் பண்ணை வீட்டில் தர்ஷன், சட்டவிரோதமாக வனவிலங்குகளை வளர்ப்பதாக கிடைத்த தகவல்படி, கடந்த ஆண்டு அந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்திய வனத்துறையினர், நான்கு பட்டை தலை வாத்துகளை பறிமுதல் செய்தனர். கடந்த ஜனவரி மாதம் காட்டேரா திரைப்பட வெற்றியை கொண்டாட, 'பப்'பில் இரவு முழுதும் பார்ட்டி நடத்தியதாக, தர்ஷன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ரேணுகாசாமியை எச்சரித்து விட்டு சென்றதாகவும், அவரை தாக்கவில்லை என்றும், விசாரணையின் போது தர்ஷன் கூறி இருந்தார். இந்நிலையில் ரேணுகாசாமி கொல்லப்பட்ட ஷெட் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் நேற்று வெளியாகின. 9ம் தேதி அதிகாலை 3:20 மணிக்கு பட்டனகெரே ஷெட்டில் இருந்து, தர்ஷன் பயன்படுத்தும் கார் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. ஆனால் காருக்குள் அவர் இருந்தாரா என்று தெரியவில்லை.

கொலையான ரேணுகாசாமியின் தந்தை சிவன கவுடா. ஓய்வு பெற்ற பெஸ்காம் ஊழியர். ரேணுகாசாமிக்கு கடந்த ஆண்டு ஜூன் 28ம் தேதி திருமணம் நடந்தது. ரேணுகாசாமியின் மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட இன்னும் 18 நாள் இருந்த நிலையில், ரேணுகாசாமி கொலையாகி உள்ளார். பஜ்ரங் தள் அமைப்பிலும் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

ரேணுகாசாமி கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று, அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ரேணுகாசாமி மனைவி கர்ப்பிணி








      Dinamalar
      Follow us