சபரிமலையில் நடிகர் திலீப் சுவாமி தரிசனம்; அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ்
சபரிமலையில் நடிகர் திலீப் சுவாமி தரிசனம்; அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ்
ADDED : டிச 08, 2024 05:41 PM

பத்தினம்திட்டா: சபரிமலையில் நடிகர் திலீப் உள்ளிட்டோருக்கு வி.ஐ.பி., தரிசனத்திற்கு அனுமதித்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கிய நிலையில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், சபரிமலையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பக்தர்கள் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திருவாங்கூர் தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த டிச.,5ம் தேதி கோவில் நடை அடைக்கும் முன்பு நடிகர் திலீப் முன்வரிசையில் நெடுநேரம் நின்று சாமி தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், திலீப்புக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளித்ததன் மூலம், நீண்ட தூரம் நடந்து வந்த பக்தர்களுக்கு இடையூறாக இருக்காதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், வி.ஐ.பி., முறையில் நடிகர் திலீப் உள்ளிட்டோரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து 4 அதிகாரிகளுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையில் திருப்தியளிக்காத பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.