UPDATED : அக் 17, 2026 08:00 PM
ADDED : அக் 17, 2026 07:54 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பங்களாவில், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை மும்பை மாநகராட்சி இடித்து அகற்றியது.
மஹாராஷ்டிராவின் மும்பை ஜுஹு பகுதியில் நடிகர் அஜய் தேவ்கானுக்குச் சொந்தமான, 7,802 சதுர அடி பங்களா உள்ளது. அங்கு மாநகராட்சி அனுமதியின்றி உட்புற மாற்றங்கள், புதிய ஜன்னல்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கடந்த மாதம் 10ம் தேதி, மாநகராட்சி நிர்வாகம் அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக பதில் அளிக்க நடிகர் அஜய் தேவ்கன் நான்கு வாரம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அவரிடம் இருந்து மேற்கொண்டு எந்த பதிலும் கிடைக்காததுடன், சட்டவிரோத கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத பகுதிகளை நேற்று இடித்து அகற்றினர்.
இந்த நடவடிக்கை குறித்து அஜய் தேவ்கன் இதுவரை பொதுவெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை அவர் சட்டரீதியாக எதிர்கொள்ளப் போகிறாரா அல்லது தேவையான ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
