'வறண்ட நிலத்தில் வருமானம் தரும் சப்பாத்திக் கள்ளி!'
'வறண்ட நிலத்தில் வருமானம் தரும் சப்பாத்திக் கள்ளி!'
UPDATED : அக் 18, 2026 01:01 AM
ADDED : அக் 17, 2026 07:46 PM

முள் இல்லா சப்பாத்திக் கள்ளி சாகுபடியில் ஈடுபட்டு, கணிசமான வருமானம் ஈட்டி வரும், பெரம்பலுார் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த, 46 வயதாகும் சுரேஷ் தேவராஜ்:
கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு சப்பாத்திக் கள்ளி இலைகள் மிகச் சிறந்த உணவுப்பொருள்; நார்ச்சத்து, இரும்புச்சத்து இரண்டும் அதிகம். இந்த இலைகளில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்; சாறு எடுத்தும் குடிக்கலாம்; வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படும்.
கடந்த 2003-ல், சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். 2010- முதல் அடிக்கடி ஊருக்கு வந்து, அப்பாவுக்கு உதவியாக விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.
கடந்த 2013ல், 100 தலச்சேரி ஆடுகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம். குத்தகைக்கு நிலம் பிடித்து தீவனப் பயிர்கள் சாகுபடி செய்தோம். 'கொரோனா' ஊரடங்கில் வேலையை விட்டுட்டு, முழு நேரமாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.
பெரம்பலுார் மாவட்டத்தில் படிப்படியாக வறட்சி அதிகமானது. அதனால், வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர்கள் குறித்து தேட ஆரம்பித்ததில், முள் இல்லா சப்பாத்திக் கள்ளி குறித்து தெரியவந்தது.
கர்நாடகாவில் இருந்து சப்பாத்திக் கள்ளி இலைகளை காம்புடன் வாங்கி வந்து, சோதனை முயற்சியாக அரை ஏக்கரில் நடவு செய்தேன். சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் விட்டதில் அவை செழிப்பாக வளர்ந்தன.
சப்பாத்திக் கள்ளி இலைகளின் மருத்துவ குணங்கள் குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினேன். அதை பார்த்து சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதி விவசாயிகளும், இதை சாகுபடி செய்ய ஆரம்பித்தனர்.
மருந்து கம்பெனிகள், அழகுப் பொருட்கள் தயாரிப்போர் டன் கணக்கில் முள் இல்லா சப்பாத்திக்கள்ளி இலைகளை கேட்க ஆரம்பித்தனர். இதற்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
இப்போது, 1.5 ஏக்கரில் சாகுபடி செய்து, அதிக மெனக்கெடல் இல்லாமல் நல்ல வருமானம் ஈட்டி வருகிறேன். மூன்று மாதங்களுக்கு முன் வரை, வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டு வந்தேன்.
இப்போது எங்கள் பகுதியில் கடும் வறட்சி என்பதால், மூன்று மாதங்களாக சப்பாத்திக் கள்ளி செடிகளுக்கு ஒருமுறை கூட தண்ணீர் விடவில்லை. ஆனாலும், செடிகளின் பசு மை குறையவில்லை.
நடவு செய்த ஓராண்டில் மகசூல் கிடைக்க ஆரம்பித்தது. முதிர்ந்த இலைகளை, வெறும் மண்ணில் நட்டாலே, அது செடியாக வளர்கிறது.

ஒரு இலை விலை, 50 ரூபாய் என, ஒரு நாளைக்கு ஐந்து முதிர்ந்த இலைகளின் விற்பனை மூலம் தினமும், 250 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆண்டு முழுக்க விற்பனை செய்வதால், ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
96000 26269
