நடிகையின் கணவரின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம்
நடிகையின் கணவரின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம்
ADDED : ஏப் 18, 2024 07:03 PM

மும்பை: சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
கடந்த2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என விளம்பரடுத்திய வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து ரூ.6,600 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. வேரியபில் டெக் நிறுவனத்தின் நிர்வாகிகள் அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் ஏஜென்ட்டுகள்மீது டில்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா ஆகியோர் பெயர்களில் மும்பை ஜுகு , புனே ஆகிய நகரங்களில் உள்ள ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

