ADDED : மார் 20, 2024 01:12 AM
புதுடில்லி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, இந்த இரண்டு மாநிலங்களின் கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணைநிலை கவர்னராகவும் இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன்.
இவர், தன் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஏற்றார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், கூடுதலாக தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் பதவிகளை கவனிப்பார் என ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அறிவித்தார்.
இதற்கு தன் நன்றியை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரியின் துணைநிலை கவர்னராகவும் பணிபுரியும் கூடுதல் பொறுப்பு எனக்குக் வழங்கப்பட்டு உள்ளதை பணிவுடன் ஏற்கிறேன்.
'தாய்நாட்டிற்கு சேவை செய்ய கூடுதல் பொறுப்பு வழங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி' என, பதிவிட்டுள்ளார்.

