ADDED : நவ 26, 2024 12:56 AM
பெங்களூரு: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் வகையறாக்கள் மீது 1,300 பக்க கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கடந்த ஜூன் 8ம் தேதி நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் தாக்கி கொலை செய்தனர்.
இவர்கள் மீது செப்டம்பர் மாதம் 3,991 பக்க குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பல்லாரி சிறையில் இருந்த தர்ஷன், முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, ஆறு வார கால இடைக்கால ஜாமினில் வெளியே வந்து உள்ளார்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக தர்ஷன் உட்பட 17 பேர் மீது 1,300 பக்க கூடுதல் குற்றபத்திரிகையை நீதிமன்றத்தில், போலீசார் தாக்கல் செய்தனர். கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்ததற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிரந்தர ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது. கூடுதல் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவலை வைத்து, அரசு வக்கீல் பிரசன்ன குமார் வாதாடும் வாய்ப்புள்ளது.
இடைக்கால ஜாமினில் வெளியே வந்து மூன்று வாரங்களாகியும் தர்ஷன் இன்னும் அறுவை சிகிச்சை செய்யவில்லை. இதனால் இடைக்கால ஜாமினை ரத்து செய்யும்படி கேட்கவும் அரசு வக்கீல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.