லால்பாக், கப்பன் பார்க்கில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
லால்பாக், கப்பன் பார்க்கில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு
ADDED : மார் 19, 2025 09:14 PM

பெங்களூரு; ஹோலி பண்டிகையின் போது, லால்பாக் பூங்காவில் நேபாளத்தை சேர்ந்த இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் நடந்ததால், பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த, தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மார்ச் இறுதியில், ரம்ஜான், யுகாதி பண்டிகைகள் வருகின்றன. பெங்களூரின் லால்பாக் மற்றும் கப்பன் பூங்காவுக்கு சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வரும் வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஹோலி பண்டிகையின் போது, லால்பாக் பூங்காவுக்கு வந்த நேபாளிகள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது; பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அங்கிருந்த வியாபாரிகளையும் தாக்கினர். இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்த, பூங்காக்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம்.
தற்போது லால்பாக் பூங்காவில், தினமும் இரண்டு ஏட்டுகள் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஷிப்டுக்கு 26 பேர் வீதம் மூன்று ஷிப்டுகளில் பாதுகாப்பு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
பூங்காவில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 95 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 19 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரம்ஜான் பண்டிகையின் மறுநாளும், யுகாதி பண்டிகை நாளன்றும் கப்பன் பூங்காவுக்கு பெருமளவில் மக்கள் வருகை தருவர். எனவே கூடுதல் போலீசாரை நியமிக்கும்படி போலீஸ் துறையிடம் கோரியுள்ளோம்.
கப்பன் பூங்காவில் 50 கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன. காலை ஷிப்டில் 21 பாதுகாப்பு ஊழியர்கள்; இரவு ஷிப்டில் 15 பேர் பணியாற்றுகின்றனர். லால்பாக் பூங்கா, கப்பன்பூங்கா என, இரண்டுமே வரலாற்று பிரசித்தி பெற்ற பூங்காக்களாகும். எந்த காரணத்தை முன்னிட்டும், பூங்காக்களில் அசம்பாவிதங்கள் நடக்க விடமாட்டோம்.
சட்டவிரோத செயல்கள் நடப்பதை, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதை சகிக்க முடியாது. இச்சம்பவங்கள் நடந்தால், சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.