தங்கச்சுரங்க இறுதி செட்டில்மென்ட் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
தங்கச்சுரங்க இறுதி செட்டில்மென்ட் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : பிப் 22, 2024 07:09 AM
தங்கவயல்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த, தங்கச் சுரங்க தொழிலாளர்களின் இறுதி செட்டில்மென்ட் வழக்கின் விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசின் பி.ஜி.எம்.எல். என்ற பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் என்ற தங்கச் சுரங்கத்தை 2001ல் இழப்பில் இயங்குவதாக காரணம் காட்டி மூடப்பட்டது.
தங்கச் சுரங்கத்தை மூடும்போது, கர்நாடக உயர்நீதிமன்றம், ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள் 3,200 தொழிலாளர்களுக்கு 50 சதவீத இழப்பீடுத் தொகையை வழங்கவும், மீதியுள்ள 50 சதவீதத் தொகையை தங்கச் சுரங்கத்தை மீண்டும் நடத்த வரும் நிறுவனத்தார் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்காக உலகளாவிய டெண்டர் விட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், 2021 வரையில் நீதிமன்ற தீர்ப்பு படி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
எனவே, அந்த 50 சதவீத தொகையையும், பல ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் உள்ள தொகைக்கு வட்டியுடன் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, 2021ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் தொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தங்கச் சுரங்க துணைப் பொது மேலாளராக இருந்த சென்னமாலிகா தொழிலாளர் தரப்பு வக்கீலாக ஆஜரானார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் விவாதம் நேற்றுடன் முடிந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
வழக்கின் தீர்ப்பு வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் முன்னாள் தொழிலாளர்கள் பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
தங்கச் சுரங்கம் மூடப்பட்ட இந்த 23 ஆண்டுகளில் இறுதி செட்டில்மென்ட் பெறாமலேயே இதுவரை 700க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.