மொராதாபாத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
மொராதாபாத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்
UPDATED : ஜன 01, 2025 10:14 PM
ADDED : ஜன 01, 2025 03:36 PM

லக்னோ: உ.பி.,யின் மொராதாபாத் நகரில் 44 ஆண்டுகளுக்கு முன்னர் கலவரம் காரணமாக மூடப்பட்ட கோவில், தற்போது திறக்கப்பட்டு உள்ளது.
மொராதாபாத் நகரில் உள்ள கவுரி சங்கர் கோவிலில் பீம்சென் என்பவர் அர்ச்சகர் ஆக இருந்து வந்தார். 1980 ல் அந்நகரில் ஏற்பட்ட கலவரத்தில் அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்தனர். அதன் பிறகு அக்கோவில் பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டது. பிறகு சீல் வைக்கப்பட்டது. இதன் பிறகு கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு வழிகள் அடைக்கப்பட்டன.
உ.பி.,யில் பல நகரங்களில் நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1978 ல் சம்பல் மாவட்டத்தில் மூடப்பட்ட சிவன் ஹனுமான் கோவில் டிச., 14 ல் திறக்கப்பட்டது. அலிகர் நகரிலும் 50 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட சிவன் கோவிலும் திறக்கப்பட்டது.இதனையடுத்து 1980ல் கொல்லப்பட்ட கவுரி சங்கர் கோவில் அர்ச்சகர் பீம்சென்னின் பேரன் சேவா ராம் என்பவர், மொராதாபாத் மாவட்ட கலெக்டரிடம், கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
இதனையடுத்து கோவில் இருந்த இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், தடையாக இருந்த சுவரை இடித்து அகற்றியதுடன், ஆக்கிரப்புகளை எடுத்துவிட்டு இடத்தை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்கோவிலை திறந்தனர். கோவிலை ஆய்வு செய்த அதிகாரிகள், சுவற்றில் ஹனுமன் சிலை இருப்பதை கண்டறிந்தனர். சிவலிங்கம் காணாமல் போனதை கண்டுபிடித்த அவர்கள்,நந்தி சிலை இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர்.

