ரத்தன் டாடா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய 'கோவா' வீடியோ வைரல்
ரத்தன் டாடா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய 'கோவா' வீடியோ வைரல்
ADDED : அக் 11, 2024 07:35 AM

மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு கோவா என்ற பெயர் கொண்ட அவரது வளர்ப்பு நாய் இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று மாலை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டாடா நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், விஐபிகள் பலர் வந்து அஞ்சலி செலுத்தியபடி இருந்தனர். அப்போது, டாடாவின் வளர்ப்பு நாய் கோவா, அங்கு அழைத்துவரப்பட்டிருந்தது. டாடா உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி அருகே, அந்த நாய் சோகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தது.
செல்லப் பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான டாடா, நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். செல்லப்பிராணிகளுக்காக நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை மும்பையில் நிர்மாணித்தவர். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், வளர்ப்பு நாய் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியது, அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.டாடா உடல் அருகே நாய் அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த கோவா?
நாய் கோவாவின் பெயருக்கு பின்னால் இருக்கும் கதை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ரத்தன் டாடாவின் கோவா பயணத்தின் போது, ஒரு தெருநாய் அவரை பின்தொடரத் துவங்கியது. இதனை கண்ட டாடா, நாயை தத்தெடுத்து மும்பைக்கு அழைத்து வந்தார். கோவா என பெயரிட்டு, டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸில் அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.
அதிக அன்பு
கோவாவின் பராமரிப்பாளர், ரத்தன் டாடாவிற்கும், அவரது செல்லப்பிள்ளைக்கும் இடையே இருந்த உறவை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது: கடந்த 11 ஆண்டுகளாக கோவா எங்களுடன் உள்ளது. நாங்கள் சுற்றுலா சென்றிருந்தபோது , இந்த நாய் கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. ரத்தன் டாடா கோவா மீது அதிக அன்பு வைத்து இருந்தார்' என்றார். பல ஆண்டுகளாக, டாடா கோவா மற்றும் பிற நாய்களுடன் இருக்கும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ரத்தன் டாடாவின் நாய்கள் மீதான அன்பு, குறித்து அவரது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் சுஹேல் சேத் கூறியதாவது: 2018ம் ஆண்டில், டாடா பிரிட்டிஷ் அரச குடும்பத்திடமிருந்து ஒரு மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், ஆரம்பத்தில் அவரது வருகையை உறுதிப்படுத்திய போதிலும், டாடா தனது நோயுற்ற நாயைப் பராமரிப்பதற்காக வீட்டிலேயே இருக்க கடினமான முடிவை எடுத்தார். இதன் மூலம் செல்லப்பிராணிகள் மீதான அவரது அன்பை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.