ADDED : அக் 07, 2025 12:30 AM
ஆலந்தூர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதி வாயிலாக, ஆலந்துார் மண்டலம், 163வது வார்டு, ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரத்தில், 12 கோடி ரூபாயில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல், 160வது வார்டு ஆலந்துார், புதுத்தெருவில், 16 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
அவற்றை, சி.எம்.டி.ஏ., மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
பின், அமைச்சர் சேகர்பாபு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
ஆதம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டடம், வரும் ஜன., மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கத்திப்பாரா மேம்பாலம் அருகே, 16 கோடி ரூபாயில் கட்டப்படும் திருமண மண்டபப் பணிகள், விரைவில் நிறைவு பெறும்.
அதில், ஏழை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில், குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.