அடையாறு ஆற்றில் வெள்ளம்; மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
அடையாறு ஆற்றில் வெள்ளம்; மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
UPDATED : டிச 13, 2024 02:40 PM
ADDED : டிச 13, 2024 01:19 PM

சென்னை: தொடர் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் பெஞ்சல் புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து அப்பகுதி மீண்டு வருவதற்குள், மீண்டும் கனமழை கொட்டி வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையை சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. படிப்படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மொத்தம் 47 ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.