ADDED : செப் 19, 2025 01:59 AM

புதுடில்லி:டில்லி மிருக காட்சி சாலையில் இருந்த ஒரேயொரு ஆப்ரிக்க யானை திடீரென இறந்தது. அதன் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி மிருக காட்சி சாலையில், சங்கர் என பெயரிடப்பட்ட ஆண் யானை வளர்ந்து வந்தது. ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இந்தியாவுக்கு, 1996ல் வழங்கப்பட்ட இந்த யானை, 1998ல் இந்தியா கொண்டு வரப்பட்டது.
தற்போது, 29 வயதாகும் அந்த ஆண் யானை நேற்று திடீரென இறந்தது. அதன் மரணத்திற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சரி வர உணவு உட்கொள்ளாமல் அந்த யானை இருந்தது என மிருக காட்சி சாலை அதிகாரிகள் கூறினர் .
இந்த மிருக காட்சி சாலையில் பல ஆசிய யானைகள் இருக்கும் நிலையில், அங்கு வளர்ந்து வந்த ஆப்ரிக்க யானை திடீரென இறந்தது, மிருக காட்சி சாலை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.