10 ஆண்டுக்கு பின் இன்று ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல்
10 ஆண்டுக்கு பின் இன்று ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல்
ADDED : செப் 18, 2024 12:58 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று(செப்.,18) முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில், 25ல் இரண்டாம் கட்ட தேர்தலும், அக்., 1ல் மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது.
முதற்கட்ட தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும்; காங்., சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் அனல் பறக்க பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக், குல்காம், ராம்பான், புல்வாமா, சோபியான், கிஷ்த்வார், டோடா ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதிகளில், 90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 23.27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 18 - 19 வயதுக்குட்பட்ட 1.23 லட்சம் இளைஞர்களும் அடங்குவர்.
இந்த தேர்தலுக்காக, 3,276 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; 14,000க்கும் அதிகமான ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, கூடுதல் அளவில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மத்திய ஆயுத துணை ராணுவப் படை, ஜம்மு - காஷ்மீர் ஆயுதப் போலீஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக, 2014ல் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பின், மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கருத்து வேறுபாடு காரணமாக, 2018ல் ஆட்சி கவிழ்ந்தது. 2019ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.