20 ஆண்டுக்கு பின் காய்த்த ராம பலா மரம் ராமர் ஆசிர்வாதம் என பக்தர் நெகிழ்ச்சி
20 ஆண்டுக்கு பின் காய்த்த ராம பலா மரம் ராமர் ஆசிர்வாதம் என பக்தர் நெகிழ்ச்சி
ADDED : ஜன 22, 2024 06:11 AM

சாம்ராஜ்நகர்: பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட ராம பலா மரம் இப்போது காய்த்துள்ளது. 'இது ராமபிரானின் சக்தி' என, மக்கள் நம்புகின்றனர்.
சாம்ராஜ் நகரில் வசிக்கும் சுரேஷ் ரிக்வேதி என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன், தன் வீட்டு தோட்டத்தில் ராம பலா மரக்கன்றை நட்டு பராமரித்தார். பலா வகைகளில், ராம பலாவும் ஒரு வகையாகும்.
இது மரமாக வளர்ந்ததே தவிர, இதுவரை பலனளிக்கவில்லை. ஒரு முறை கூட காய்க்கவில்லை. ஆயினும், சுரேஷ் மரத்தை வெட்டாமல், பாதுகாத்து வந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில், இந்த மரத்தில் ஐந்தாறு காய்கள் காய்த்து தொங்குகின்றன.
சுரேஷ் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது ராமரின் அருள் என, நம்புகின்றனர். ராமரே தங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்ததாக கருதி, ராம பலா மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினர். கிராமத்தினர் மரத்தை பக்தியுடன் பார்க்க வருகின்றனர்.
சாம்ராஜ் நகரிலும், ராமர் பாதம் பதிந்த பல இடங்கள் உள்ளன. ராமர், சீதை, லட்சுமணனுடன் வனவாசம் என்ற போது, சாம்ராஜ்நகரின் பல்வேறு இடங்களில் நடமாடியதாக ஐதீகம். இது குறித்து, புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
கொள்ளேகாலின், சத்தேகாலா அருகில் பட்டஷெட்டி தொட்டி அருகில், கவிராய சுவாமி என்ற திருத்தலம் உள்ளது. இப்பகுதியில் ராமர் வன வாசம் செய்தார். ராமன் தன் தந்தை தசரத மஹாராஜாவுக்கு, பிண்டம் வைத்து பூஜித்த இடம் என்ற பெருமை, கவிராயசுவாமி தலத்துக்கு உண்டு.
தற்போது பிலிகிரி வனம், புரணங்களில் கஜாரன்யா, சம்பகாரண்யா என, அழைக்கப்பட்டது. இந்த வனத்துக்கும், ராமாயணத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது, ராமனும், லட்சுமணனும், இதே வனம் வழியாகவே இலங்கைக்கு சென்றனர்.
இப்போதும் ராமர் நடமாடியதாக கூறப்படும் இடங்களுக்கு, பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.