திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழாவுக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழாவுக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : டிச 27, 2025 05:21 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழாவுக்கு தடை கோரிய வழக்கில் மதுரை கலெக்டர், தர்கா நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாணிக்கமூர்த்தி தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு புனித இடம். மலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானது. மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. இங்கு 2024 ல் தர்கா நிர்வாகம் கந்துாரி விழா நடத்த ஏற்பாடு செய்து அறிவிப்பு பலகை வைத்தது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரி விழாவின் ஒரு முக்கிய பகுதி. கோயில் அதிகாரிகளின் புகாரின் பேரில், அந்த அறிவிப்பு பலகையை போலீசார் அகற்றினர். சிலர் 2024 டிச., 25 ல் ஆடுகளுடன் மலையில் ஏற முயன்றனர். அதை போலீசார் தடுத்தனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்மானிக்கப்பட்டது.
மலையில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கலாகின. தர்கா நிர்வாகம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது. அசைவ உணவு பரிமாறக்கூடாது. அது வழக்கம் என கருதினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யவில்லை. சிவில் நீதிமன்றத்தை அணுகவில்லை.
டிச., 21 முதல் ஜன., 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடுவிழா நடத்த தர்கா நிர்வாகம் நோட்டீஸ் வினியோகித்தது. சுவரொட்டிகளை ஒட்டியது. புனித மலையில் கந்துாரி நடத்துவதை தடுக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தர்கா விழா தொடர்பாக டிச., 18 ல் ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. மலையில் சந்தனக்கூடு விழாவை நடத்த அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கந்துாரி குறித்து விவாதிக்கவில்லை. அது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
கோயில் அதிகாரிகள் சமாதான கூட்டத்தில் பங்கேற்றனர். தர்கா நிர்வாகம் மலையில் கந்துாரி என்ற பெயரில் விலங்கு பலியிடுவது குறித்து வெளியிட்ட அறிவிப்பிற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
மலையில் கந்துாரி விழா நடத்துவதை தடை செய்யாமல், அங்கு விழா நடத்த அனுமதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.
மலை மீது முருகனின் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. அதில் நிலா பிறை பொறித்த கொடி கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல் மீண்டும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும். நிலா பிறை கொடியை அகற்ற வேண்டும். கல்லத்தி மரத்தை பாதுகாக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.ஜோதிராமன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். கலெக்டர், போலீஸ் கமிஷனர், மேலுார் ஆர்.டி.ஓ., திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தலைவர், தர்கா மேலாண்மை அறங்காவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜன., 2 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

