4 நாள் கழித்து 3ம் கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
4 நாள் கழித்து 3ம் கட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
ADDED : மே 11, 2024 05:14 PM

புதுடில்லி: 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து 4 நாட்கள் கழித்தும் ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதிய கடிதத்தில், ‛‛ லோக்சபா தேர்தலில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஓட்டு சதவீதத்தை வெளியிடுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் நீண்ட தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சி தலைவரின் கருத்து விரும்பத்தகாதது. ஆதாரமற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாரபட்சமான தகவல்களை உருவாக்கும் முயற்சி என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் 3ம் கட்டமாக கடந்த மே 7 ம் தேதி குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இது முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 66.89 சதவீத ஆண்களும், 64.41 சதவீத பெண்களும், 3ம் பாலினத்தவர் 25.2 சதவீதம் பேரும் ஓட்டுப் போட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.