சோனியா, ராகுலுக்கு நிம்மதி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
சோனியா, ராகுலுக்கு நிம்மதி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு
ADDED : டிச 16, 2025 03:12 PM

புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, அவரது மகன் ராகுலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குற்றப்பத்திரிகை
'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் வாங்கியது.
இந்நிறுவனத்தில் காங்., முன்னாள் தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். மேலும், காங்., மூத்த தலைவர்கள் பலரும் இந்நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.ஏ.ஜே.எல்., நிறுவனத்தின், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார்.
இதில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், 751 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.சமீபத்தில், இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மறுப்பு
இந்நிலையில், சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது.
நீதிமன்றம் தனது உத்தரவில் , ' அமலாக்கத்துறையின் இந்த வழக்கு, முதல் தகவல் அறிக்கையில் இருந்து அல்லாமல் பாஜ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த ஒரு தனிப்பட்ட புகார் மற்றும் நீதிபதியின் சம்மன் உத்தரவுகளில் இருந்து உருவானதால், இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது.
சோனியா, ராகுல் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், வழக்கின் இந்த கட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பெற தகுதியவற்றவர்கள். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனது மேலதிக விசாரணையைத் தொடரலாம் ,' எனத் தெரிவித்துள்ளது.
ஆலோசனை
விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வரவேற்பு
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், உண்மை வென்றுவிட்டது. சோனியா, ராகுலுக்கு எதுிராக அமலாக்கத்துறையின் விசாரணை சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிமன்றம், மோடி அரசின் பொய் அம்பலப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடக்கவில்லை. குற்றம் அல்லது சதிச்செயல் ஏதும் இல்லை. அரசியல் ரீதியாக பழிவாங்க குற்றம்சாட்டப்பட்டது என தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக மத்திய விசாரணை அமைப்புகள், மத்திய பாஜ அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.
உண்மை தங்கள் பக்கம் இருப்பதாலும், எந்த அச்சமும் இல்லாததாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரஸ் எம்பி ராகுலும் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களில் உறுதியாக நிற்பதை சகித்துக்கொள்ள முடியாத பாஜ, அவர்களின் குடும்பத்தைத் தொடர்ந்து துன்புறுத்துவதில் குறியாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் கையாளப்படும் இந்த பழிவாங்கும் அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை களங்கப்படுத்துகிறது மற்றும் அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே சுருக்கிவிடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

