சந்தேஷ்காலியில் மீண்டும் வன்முறை: திரிணமுல் நிர்வாகி கட்டடத்துக்கு தீ வைப்பு
சந்தேஷ்காலியில் மீண்டும் வன்முறை: திரிணமுல் நிர்வாகி கட்டடத்துக்கு தீ வைப்பு
ADDED : பிப் 23, 2024 11:39 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், தலைமறைவாக உள்ள ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் சகோதரர் சிராஜுக்கு சொந்தமான கட்டடத்தை, அப்பகுதி மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவியது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
போராட்டம்
இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின், சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், தன் ஆதரவாளர்களோடு இணைந்து, அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கும் மேல் தலைமறைவாக உள்ள ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யும்படி, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் புயலைக் கிளப்பி உள்ளது.
இந்நிலையில், சந்தேஷ்காலியின் பெல்மஜுர் என்ற பகுதியில், ஷாஜஹான் ஷேக்கின் சகோதரர் சிராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தை, அப்பகுதி மக்கள் நேற்று தீ வைத்து எரித்தனர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தடுத்து நிறுத்தம்
இதற்கிடையே நேற்று, சந்தேஷ்காலிக்குச் சென்ற ஆறு பேர் அடங்கிய தேசிய மனித உரிமைகள் கமிஷனின் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பேசி குறைகளை கேட்டறிந்தனர்.
பா.ஜ., மகளிர் அணியைச் சேர்ந்த குழுவினரும், நேற்று சந்தோஷ்காலிக்கு செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து பா.ஜ., மாநில பொதுச் செயலர்கள் லாக்கெட் சட்டர்ஜி, அக்னி மித்ரா ஆகியோர் கூறுகையில், 'கலவர பகுதிக்கு நாங்கள் சென்றால், உண்மை வெளியில் தெரிந்து விடும் என மாநில அரசு பயப்படுகிறது. அதனால் தான் எங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்' என்றனர்.

