வயது வெறும் நம்பர் தான்! விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி!
வயது வெறும் நம்பர் தான்! விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி!
ADDED : டிச 06, 2024 06:41 AM

'ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்' - -
என்ற திருக்குறளுக்கு உதாரணம் ரோஹன் போபண்ணாவின் வாழ்க்கை
'செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்' என்பது திருவள்ளுவரின் வாக்கு.
பெங்களூரின் எம்.ஜி.போபண்ணா - மல்லிகா தம்பதிக்கு 1980ல் பிறந்தவர் தான் ரோஹன். இவரது தந்தை ஒரு காபி வியாபாரி. ரோஹனுக்கு சிறுவயதில் இருந்தே டென்னிஸ் மீது ஆர்வம் அதிகம். தனது 11 வயதிலேயே பயிற்சியில் இறங்கி விட்டார். குழந்தை பருவத்தில் எப்போதும் டென்னிஸ் பேட்டுடனே இருப்பார்.
'முடிசூடா' மன்னன்
இளம் வயதில் சரியாக விளையாடவில்லை என பல அகாடமிகள் பயிற்சி கொடுக்க மறுத்துள்ளன. அப்போது அவர்களுக்கு தெரியாது, வரும் காலத்தில் இந்த சிறுவன் தான் டென்னிஸ் உலகின் 'முடிசூடா' மன்னனாக போகிறார் என்று.
ஆடுகளத்தில் இவர் விளையாடிய விதத்தை பார்த்த அனைவரும் அசந்தனர். தனது திறமையினால் படிப்படியாக முன்னேறி, 2002ல் 'டேவிஸ் கோப்பை'க்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், ஒற்றையர் பிரிவில் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் வீரர் ஆயிஷாம் குரேஷியுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
இந்த ஜோடி 2010ல் விம்பிள்டன் தொடரில் காலிறுதி, அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் ஜோடி சேர்ந்து விளையாடியதால், ரோஹன் பெயர் உலகளவில் பிரபலம் அடைந்தது. இந்த ஜோடிக்கு, 'இந்தோ - பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்' என்ற செல்ல பெயரும் உண்டு.
நோக்கம்
தனது வாழ்நாள் கனவான, டென்னிஸ் உலகின் உயரிய விருதான 'கிரான்ட் ஸ்லாம்' விருதை பெறுவதே நோக்கமாக வைத்திருந்தார். இந்த விருதை பெறுவது சுலபமான காரியம் இல்லை. இதற்கு காரணம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், யு.எஸ்., ஓபன் என நான்கு வகையான தொடர்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, குழுவாக விளையாடும் போட்டிகளுக்கும், தனி நபராக பங்கேற்கும் போட்டிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டு. உதராணமாக, கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி அடைந்தால், அணியில் உள்ள அனைவரின் மீதும் விமர்சனங்கள் வரும்.
ஆனால், அதுவே தனிநபர் போட்டியாளர்கள் தோல்வி அடையும் போது, ஒட்டுமொத்த விமர்சனத்தையும், அவர் ஒருவரே ஏற்க நேரிடும். இதனால் வீரர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும்; போட்டியில் கவனம் செலுத்த முடியாது.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ரோஹன், தனது மனைவியிடம், 'என்னால் டென்னிஸ் விளையாட முடியவில்லை, தோற்றுக் கொண்டே இருக்கிறேன். டென்னிஸ் விளையாடுவதை நிறுத்த போகிறேன்' என கூறியுள்ளார். அவரது மனைவி ஆறுதல் கூறி, தைரியம் கொடுத்தார்.
வீரநடை
இதில், உத்வேகமடைந்த ரோஹன், வீர நடை போட்டு களத்திற்குள் நுழைந்தார். பல்வேறு பட்டங்களை வரிசையாக தட்டி துாக்கினார். இதுவரை, 'சிக்ஸ் மாஸ்டர்ஸ் 1000' உட்பட, மொத்தம் 26 ஏ.டி.பி., பட்டங்கள் வென்றுள்ளார்.
குறிப்பாக, 2017 பிரெஞ்ச் ஓபனில் ரோஹன் போபண்ணா, கனடாவின் கேப்ரிலா ஜோடி 'கலப்பு இரட்டையர்' பிரிவில் விளையாடினார். இந்த தொடரில் வெற்றி பெற்று, தனது நீண்ட நாள் கனவான, 'கிரான்ட் ஸ்லாம்' பட்டத்தை வென்றார். இதன் மூலம் அவரது பல நாள் கனவு நிறைவேறியது. கனவு நிறைவேறி விட்டது என்று ஓய்வு எடுக்காமல், மறுபடியும் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்றார்.
நடப்பாண்டு ஐனவரியில் நடந்த, ஆஸ்திரேலிய ஓபனில், இத்தாலி வீரர் சைமோன் வாவசோரியுடன் ஜோடி சேர்ந்து, இரட்டையர் பிரிவில் தொடரை வென்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக, கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். அப்போது அவருக்கு வயது 43.
இரட்டையர் பிரிவில், 43 வயதான வீரர் ஒருவர், கிரான்ட் ஸ்லாம் பட்டம் பெறுவது டென்னிஸ் வரலாற்றிலே முதன் முறையாகும். இதுவரை இந்தியாவை சேர்ந்த மூன்று பேர் மட்டுமே கிரான்ட் ஸ்லாம் விருதை வென்றுள்ளனர். இந்த வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளார் போபண்ணா.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் இரட்டையர் பிரிவில் ஸ்ரீ ராம் பாலாஜியுடன் இணைந்து விளையாடினார். இதில், முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். இதனால், சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் விளையாடுவதில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ரோஹன் போபண்ணாவின் வாழக்கையிலிருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நமது கனவை நிறைவேற்ற, தோல்விகளை பற்றி கவலைப்படாமல், விமர்சனங்களை காதில் வாங்காமல், தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயமே
- நமது நிருபர் -.