ADDED : நவ 02, 2024 11:37 PM

'பிசியோதெரபி' துறையில், 18 ஆண்டு களாகவும், அறிவாற்றல் நடத்தை சிகிச்சையில் சிறப்பு நிபுணராகவும் உள்ள சென்னையை சேர்ந்த கோகிலா விஜயன்:
முதுமை என்றதும், அது ஒரு நோய் என்றே நினைப்பவர்கள் பலருண்டு. ஆனால், அது நோய் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், அந்த பருவத்தில் சில நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக, வயதானவர்களுக்கு வரும் நோய்களை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.
அந்த நிலையில், முதியோருக்கு சிகிச்சை தருவதும் ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தோம் என்றால், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தி, வேறு ஒரு நோய்க்கு காரணமாகி விடும்.
அதனால் நோய் வந்த பின் மருந்து சாப்பிடுவதை விட, நோய் வராமல் தடுப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, 'ப்ரிவென்டிவ் ஜெரியாட்ரிக்ஸ்' என்று பெயர்.
ஓய்வு காலத்தில் நேரம் இருக்கிறது என்பதற்காக நடைப்பயற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம். அது, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை ஓரளவுக்கு தான் தரும்.
சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கும், முதுமை நிலையை அடைந்தபின் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
சிறு வயது முதல் முறையான உடற்பயிற்சி செய்பவர்கள், '70 இயர்ஸ் யங்' என்று தான் சொல்வர்; 'ஓல்டு' என்று சொல்ல மாட்டார்கள்.
முதியோரை பொறுத்தவரை, ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்ய பழகிக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி, யோகா, சைக்கிளிங் என்று எது வேண்டு மானாலும் செய்யலாம்.
குறைந்தபட்சம் தினமும் நடக்க வேண்டும்; இதனால் எடை குறையும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் எல்லாம் கட்டுப்படும். எலும்புகள் வலுவாகும்.
இது, வயதானவர்களுக்கு சொல்லப்படும் சாதாரணமான விஷயமாக இருந்தாலும், இள வயதிலேயே உடம்பை சரியாக பராமரித்து இருந்தால், இந்த பிரச்னைகள் சீக்கிரத்தில் தாக்காது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என்று அவசரமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள், 40 வயதை கடந்த பிறகாவது, முதுமை பருவத்துக்கான ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
அப்படி செய்தால் முதுமையையும், மற்ற பருவங்களை போல், இனிமையானதாக மாற்றும் வித்தை நம்மிடம் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.