வேளாண் நிலங்கள் 'டிஜிட்டல்' மயம்; ஒரு கோடி பேருக்கு 'விவசாய ஆதார்'
வேளாண் நிலங்கள் 'டிஜிட்டல்' மயம்; ஒரு கோடி பேருக்கு 'விவசாய ஆதார்'
ADDED : ஜன 09, 2025 05:01 AM

புதுடில்லி: விவசாயிகள் மற்றும் அவர்களுடைய விவசாய நிலங்களை, 'டிஜிட்டல்' முறையில் ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை, ஒரு கோடி பேருக்கு, 'விவசாய ஆதார்' எனப்படும் தனி சிறப்பு அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மானியம், காப்பீடு உள்ளிட்டவை அவர்களுக்கு நேரடியாக கிடைக்க உள்ளன.
மத்திய அரசின் தகவலின்படி, நாடு முழுதும், 14 கோடி விவசாயிகள் உள்ளனர்.
பயிர் காப்பீடு
இவர்களில், 35 - 40 சதவீதம் பேருக்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை. அவர்கள் குத்தகைக்கு நிலங்களை எடுத்து விவசாயம் செய்கின்றனர்.
விவசாயிகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்து, இந்த சிறப்பு அடையாள எண் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், பயிர்க் காப்பீடு உள்ளிட்டவை, இனி இந்த அடையாள எண் வாயிலாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்டுள்ளன.
இதுவரை, 10 மாநிலங்களில், மொத்தமாக, ஒரு கோடி விவசாயிகளுக்கு தனி சிறப்பு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நிதியாண்டுகளில், தலா, ஐந்து கோடி பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெரிதும் உதவும்
விவசாயிகளுக்கு தற்போது ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படுகின்றன. அதையும், இந்த சிறப்பு அடையாள எண்ணுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிரிடப்படும் பயிர்கள், எதிர்பார்க்கப்படும் விவசாய உற்பத்தி ஆகியவற்றை மத்திய அரசு கணிக்க முடியும். இயற்கை சீற்றங்களின்போது, இழப்பீடு வழங்குவதற்கும் இந்த தகவல்கள் பெரிதும் உதவும்.
வானிலை தொடர்பான தகவல்களை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொள்வது போன்றவற்றுக்கும் இந்த எண் உதவும்.
தற்போதைக்கு, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி நடந்துள்ளது.

