அனைத்து சந்திப்புகளிலும் விரைவில் ஏ.ஐ., சிக்னல்கள்
அனைத்து சந்திப்புகளிலும் விரைவில் ஏ.ஐ., சிக்னல்கள்
ADDED : ஜன 30, 2025 11:50 PM

பெங்களூரு; ''நகரில் ஏ.ஐ., டெக்னாலஜி சிக்னல்கள் பொருத்தப்படாத போக்குவரத்து சந்திப்புகளில் விரைவில் பொருத்தப்படும்,'' என போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் கூறி உள்ளார்.
வாகன ஓட்டிகள்
பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. போக்குவரத்து போலீசார், பல நடவடிக்கைகள் எடுத்தும், நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக போக்குவரத்து சிக்னல்களில் ஏ.ஐ., திறன் கொண்ட சிக்னல்கள், ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை பொருத்தப்பட்டன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து வீதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும். எனவே, சாலையில் போலீசார் இல்லையென்றாலும், கேமராவிற்கு பயந்தே வாகன ஓட்டிகள் விதிகளை கடைபிடித்து வந்தனர்.
பழைய போக்குவரத்து சிக்னல்கள், குறிப்பிட்ட நேர இடைவெளியில் செயல்பட கூடியவை.
இதனால் நெரிசல் அதிகம் உள்ள சாலை, குறைவாக உள்ள சாலை எதுவென கண்டறிய முடியாது. இதனால் நெரிசலின் அளவை கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே, கடந்த 2024 மே மாதம், நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பி.ஏ.சி.டி.எஸ்., எனும் பெங்களூரு அடாப்டிவ் போக்குவரத்து கட்டமைப்பு திட்டத்தின் கீழ், ஏ.ஐ., டெக்னாலஜி கொண்ட சிக்னல்கள் பொருத்தப்பட்டன.
இந்த ஏ.ஐ., சிக்னல்கள், பழைய சிக்னல்கள் போல குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயங்க கூடியவை அல்ல. மாறாக எந்த சாலையில் அதிக நெரிசல் இருக்கிறதோ, அந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்.
அதே சமயம் குறைவாக நெரிசல் இருக்கும் சாலைகளில், சிறிது நேரம் கழித்தே வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்.
குறைந்த நேரம்
குறிப்பாக, நெரிசலை பொறுத்து, சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதனால் சாலைகளில் நெரிசல் சற்று குறைகிறது, வாகன ஓட்டிகளின் பயண நேரமும் குறைந்து வருகிறது.
இத்திட்டத்தின் படி, இம்மாத இறுதிக்குள் நகரில் உள்ள 165 போக்குவரத்து சந்திப்புகளிலும் ஏ.ஐ., சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 123 இடங்களில் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து பெங்களூரு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் எம்.என்.அனுசேத் நேற்று கூறியதாவது:
ஏ.ஐ., சிக்னல்கள் பொருத்தப்பட்ட இடங்களில், போக்குவரத்து நெரிசல் முன்பைவிட சற்று குறைவாகவே உள்ளது.
இதன் மூலம் வாகன ஓட்டிகளின் பயண நேரம் 20 சதவீதம் குறைந்து உள்ளது. 15 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது.
மீதமுள்ள இடங்களிலும் ஏ.ஐ., சிக்னல்கள் விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.