சட்டசபைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
சட்டசபைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2024 12:39 AM

''லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை போல், மாநில சட்டசபைகளிலும், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட, நவீன வசதிகளை பயன்படுத்தி அலுவல்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவலியுறுத்தினார்.
டில்லியில் நடந்த காமன்வெல்த் பார்லி மென்ட் இரண்டு நாள் கருத்தரங்கின் முடிவில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது:
வரும் நவம்பர் 3 - 8 வரை, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 67 வது காமன்வெல்த் பார்லிமென்ட் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. அதில், இந்தியா சார்பில் எத்தகைய கருத்துக்களை முன்வைப்பது என்பது குறித்து அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், மாற்று பாலினத்தவர்களின் பங்கேற்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல் மற்றும் அவமதிப்பு, அகதிகள் பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.
லோக்சபாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப சாதனம் வாயிலாக வாசித்தல் உள்ளிட்ட நவீன வசதிகள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றை கருத்தில் வைத்து, பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்களின் உரைகள் அவரவர் தாய்மொழிகளிலேயே மொழிமாற்றம் செய்யப்படுகின்றன.
லோக்சபாவை போலவே, அனைத்து மாநில சட்டசபைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளை பயன்படுத்தி அலுவல்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் வாயிலாக இந்தியாவில், 'ஒரே நாடு ஒரே டிஜிட்டல் பிளாட்பார்ம்' என்ற இலக்கை எட்ட முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-- நமது டில்லி நிருபர் -