அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் சொன்னதை விட அதிகம்: கேரள உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 'பகீர்'
அதிர்ச்சி!: சபரிமலையில் திருடப்பட்ட தங்கம் சொன்னதை விட அதிகம்: கேரள உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 'பகீர்'
ADDED : ஜன 02, 2026 12:50 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், 'மீட்கப்பட்ட தங்கத்தின் அளவை விட கூடுதலாக தங்கம் திருடப்பட்டிருக்கலாம்' என, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர்.
கடந்த, 1998ல், கோவில் மேற்கூரை, கருவறை கதவுகள் மற்றும் கருவறை முன் உள்ள துவார பாலகர் சிலைகளுக்கு தங்கக் கவசங்கள் அணிவிக்க, தொழிலதிபர் விஜய் மல்லையா, 30.3 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.
இதை வைத்து, சுவாமி அய்யப்பன் கொலுவீற்றிருக்கும் சன்னிதானத்தின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கருவறை கதவுகள், துவார பாலகர் சிலைகளுக்கும் தங்கக் கவசங்கள் அணிவிக்கப்பட்டன.
10 பேர் கைது
கடந்த, 2019ல், துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள் கழற்றப்பட்டு, தங்க முலாம் உள்ளிட்ட செப்பனிடும் பணிகளுக்காக, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர், சென்னையில் உள்ள, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்திற்கு தங்கக் கவசங்களை எடுத்து வந்து செப்பனிடும் பணிகளை மேற்கொண்டார்.
பணிகள் முடிந்ததும், கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் தங்கக் கவசங்கள் ஒப்படைத்த போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தங்கம் மாயமானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது.
துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக ஒரு வழக்கும், கோவில் கருவறையில் இருந்து தங்கம் திருடப்பட்டதாக மற்றொரு வழக்கும் என, இரு வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது.
இதில், முக்கிய குற்றவாளியான, உன்னிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கள் உட்பட இவ்வழக்கில் இதுவரை, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்க கேரள உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கெடு விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள மனு வில் கூறப்பட்டு உள்ளதாவது:
செப்பனிடும் பணிக்காக, துவார பாலகர் சிலைகளில் இருந்து மட்டும் தங்கக் கவசங்கள் கழற்றப்படவில்லை.
ஸ்ரீ கோவில் நடை பகுதியில் தசாவதாரத்தை விளக்கும் வகையிலான சிற்பங்களில் இருந்து இரு தங்கக் கவசங்கள், ராசி சின்னங்களில் அணிவிக்கப்பட்ட கவசங்கள், கதவு சட்டங்களின் மேல் பகுதியில் இருந்த கவசங்கள் மற்றும் கதவு சட்டத்தின் மேலே பிரபையில் இருந்த கவசங்கள் என, ஏழு தங்கக் கவசங்கள் செப்பனிட கழற்றப்பட்டன.
தங்க முலாம் பூசும் பணிக்கான கூலியாக, 109.24 கிராம் தங்கத்தை பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள, செப்பனிடும் பணியை மேற்கொண்ட பண்டாரி விசாரணையில் ஒப்புக் கொண்டார். மேலும், அதே அளவுக்கான தங்கத்தை கடந்த அக்., 25ல் அவர் ஒப்படைத்தார்.
எலக்ட்ரோ பிளேட்டிங் மூலம் பிரித்து எடுக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி, கோவர்தன் என்பவரிடம் தரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
சந்தேகம்
அவரிடம் விசாரித்ததில், 474.96 கிராம் தங்கத்தை கடந்த அக்., 24ல் ஒப்படைத்தார். இந்த அளவு தங்கத்தை தான் போத்தி தன்னிடம் கொடுத்ததாகக் கூறினார்.ஆனால், அவர்கள் ஒப்புக் கொண்டதை விட, மிக அதிக அளவில் தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகளின் மாதிரிகள் அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்ததும், திருடப்பட்ட தங்கத்தின் அளவு முழுமையாக தெரிந்து விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

