ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் 2 பேர் பலி
ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் 2 பேர் பலி
UPDATED : ஜூலை 09, 2025 04:02 PM
ADDED : ஜூலை 09, 2025 02:08 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவல் படி சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி, இடிபாடுகளில் சிக்கியிருந்த விமானியின் சடலத்தை மீட்பு படையினர் மீட்டனர். மற்றொரு விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். விமானம் விழுந்ததால் வயல்வெளியில் பற்றி எரிந்த தீயை கிராம மக்கள் அணைத்தனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: வானத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதையடுத்து வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. நாங்கள் விரைந்து சென்று பார்த்தோம். மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து மீட்பு பணி மேற்கொண்டனர், என்றனர்.