உ.பி.,யில் விமானப்படை விமானம் தீப்பிடித்து விபத்து: தப்பினார் விமானி!
உ.பி.,யில் விமானப்படை விமானம் தீப்பிடித்து விபத்து: தப்பினார் விமானி!
ADDED : நவ 04, 2024 06:19 PM

ஆக்ரா: உ.பி., மாநிலம் ஆக்ராவில் விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்தது; பாராசூட் மூலம் கீழே குதித்து விமானி உயிர் தப்பினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சோங்கா கிராமத்தில் உள்ள புல்வெளி பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தது. கீழே விழுந்த விமானம் எரிந்து தீப்பிழம்பாக காட்சியளித்தது. பல கிலோ மீட்டர் துாரம் தள்ளி நின்று மக்கள் மிரட்சியுடன் பார்த்தனர்.
என்ன காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து இந்திய விமானப்படை இன்னும் விளக்கம் தரவில்லை.சோவியத் யூனியன் காலத்தில் உருவான மிக்-29 விமானம், 1987ல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில், இது இரண்டாவது மிக்-29 விபத்தாகும். முன்னதாக செப்டம்பரில், ராஜஸ்தானின் பார்மரில் ஒரு வழக்கமான இரவுப் பயணத்தின் போது மிக்-29 ரக விமானம் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு விபத்துக்குள்ளானது. அன்றைய விபத்திலும், விமானி பத்திரமாக வெளியேறினார்.
இன்று நடந்த விபத்தில் விமானத்தில் பாகங்கள் எரிந்து கிடந்தன. எதனால் தீப்பிடித்தது என்று விமானப்படை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னரே முழு விபரமும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.