ஏர் இந்தியாவின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள்: ஆய்வில் தகவல்
ஏர் இந்தியாவின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள்: ஆய்வில் தகவல்
ADDED : ஜூலை 30, 2025 10:21 AM

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.,) கண்டறிந்துள்ளது.
கடந்த மாதம் 12ல் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 - -8' விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், 'ரன்' நிலையில் இருந்து, 'கட் ஆப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. விமானிகளுக்கு போதுமான பயிற்சி இல்லை.
போயிங் 787 மற்றும் 777 விமானிகளின் செயல்பாட்டில் ஏராளமான குறைபாடுகள் காணப்படுகின்றன. போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
சவால் நிறைந்த விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொள்ளாதது என குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்ப்பு நடவடிக்கைகளின் விவரங்களுடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் எங்கள் பதிலை சமர்ப்பிப்போம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனத்திற்கு ஏற்கனவே, விமானத்தில் அவசரகால உபகரணங்களைச் சரிபார்க்காமல் விமானங்களை இயக்குதல், சரியான நேரத்தில் இயந்திர பாகங்களை மாற்றாதது மற்றும் மறுசீரமைப்பு அமைப்பு உள்ளிட்டவற்றிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

