பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு; வெளியான புதிய தகவல்
பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு; வெளியான புதிய தகவல்
ADDED : அக் 28, 2025 04:32 PM

பாட்னா; ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டு இருக்கும் விவரம் வெளிவந்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 என இருகட்டங்களாக நடக்க இருக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான காலம் வெகு குறைவாகவே உள்ளதால் முக்கிய கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும், எதிரணி கூட்டணி மீது குற்றச்சாட்டுகளையும் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி அல்லாது, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது. பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம், வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந் நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு இரு மாநிலங்களில் ஓட்டுரிமை இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு ஓட்டானது, மேற்கு வங்கத்தில் இருக்கிறது. எண் 121, கலிகாட் சாலை, பஹபானிபூர் என்ற முகவரியில் இந்த ஓட்டு உள்ளது. இந்த முகவரியில் தான் திரிணமுல் காங்கிரசின் அலுவலகமும் இருக்கிறது. பஹபானிபூர் தொகுதி முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியாகும்.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2021ம் ஆண்டு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அப்போது திரிணமுல் காங்கிரஸ் அலுவலக முகவரியை அடையாளமாக கொண்டு அவர் ஓட்டுரிமையை பெற்றுள்ளார். அவரின் ஓட்டுச்சாவடி ராணிஷங்கரி லேனில் உள்ள செயிண்ட் ஹெலன் பள்ளியாகும்.
மற்றொரு ஓட்டானது, பீஹாரில் கர்காஹர் தொகுதியில் இருக்கிறது. இந்த தொகுதி சாசாரம் எம்பி தொகுதிக்குள் வருகிறது. அவரின் ஓட்டுச்சாவடி மத்ய வித்யாலாய, கோனார் கிராமம், ரோஹ்டாஸ் மாவட்டம் என்ற முகவரில் இருக்கிறது. இது தான் பிரசாந்த் கிஷோரின் பெற்றோரின் ஊராகும். பீஹாரில் அர்ராஹ் என்ற பகுதியில் தான் பிரசாந்த் கிஷோர் பிறந்தார்.
ஒரு நபருக்கு இரு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது எப்படி என்ற கேள்வியை பலரும் எழுப்பி இருக்கின்றனர். இதுகுறித்து அவரது கட்சி நிர்வாகி தரப்பில் கூறுகையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் தமது பெயரை அவர் சேர்த்துள்ளார்.
அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க உரிய விண்ணப்பத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 17ன் படி சட்டப்படி வாக்காளராக தகுதிபெற்ற எவர் ஒருவரும், இரு இடங்களில் ஓட்டுரிமையை வைத்திருக்கக்கூடாது. பிரிவு 18ன் படி, ஒரு வாக்காளர் ஒரே தொகுதியில், இரு இடங்களில் தமது ஓட்டை பதிவு செய்து வைத்திருக்கக்கூடாது. ஒரு வேளை இருப்பிடத்தை மாற்றினால் கட்டாயம் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்து அதை சரி செய்திருக்க வேண்டும்.

