வீல் சேர் வழங்காத ஏர் இந்தியா 30 லட்சம் ரூபாய் அபராதம்
வீல் சேர் வழங்காத ஏர் இந்தியா 30 லட்சம் ரூபாய் அபராதம்
ADDED : மார் 01, 2024 12:47 AM
புதுடில்லி: மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தராததால் நடந்து சென்ற, 80 வயது பயணி உயிரிழந்த சம்பவத்தில், விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 80 வயது முதியவர், தன் மனைவியுடன் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார்.
விமானத்தில் இருந்து குடியேற்றத்துறை அலுவலகம் செல்ல, சக்கர நாற்காலி தேவை என கேட்டார். ஒரு சக்கர நாற்காலி மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் மனைவியை அமர வைத்து, நடந்து சென்ற அவர், பாதி வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம், விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் கேட்டிருந்தது.
ஏர் இந்தியா அளித்த விளக்கத்தில், 'அந்த சமயத்தில் சக்கர நாற்காலிகளுக்கு தேவை அதிகம் இருந்ததால், பயணியின் மனைவிக்கு மட்டும் சக்கர நாற்காலி கிடைத்தது. அவரது கணவரை காத்திருக்கும்படி கேட்ட போதும், அதை ஏற்க மறுத்து நடக்கத் துவங்கினார்' என கூறியிருந்தது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த இயக்குனரகம், பயணியர் விமானம் ஏற செல்லும் போதும், விமானத்தில் இருந்து இறங்கும் போதும் போதிய சக்கர நாற்காலிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறியதுடன், அதை செயல்படுத்தாத ஏர் இந்தியாவுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

