ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்பு; விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்பு; விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:09 PM

புதுடில்லி: ''ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டது'' என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா' விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை அறிய, பைலட் அறையில் இருக்கும் கருப்புப் பெட்டியை தேடும் பணியை, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும், விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது.
பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டு உள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் தரவுகள் மீட்கப்பட்டு உள்ளது.
ஜூன் 25ம் தேதி வெற்றிகரமாக மீட்கப்பட்டது. தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. கருப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் இது போன்று நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. இவ்வாறு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.