ADDED : டிச 25, 2024 12:30 AM
புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசு கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், காற்று மாசு அபாய நிலையை எட்டியதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
வெளிமாநில பெட்ரோல் மற்றும் டீசல் பஸ்கள் டில்லிக்குள் வரவும், என்.சி.ஆர்., பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கும் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், காற்று மாசு நேற்று குறையத் துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 369 ஆக இருந்தது.
மேலும், வானிலை ஆய்வு மையம் மற்றும் வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் ஆகியவை சாதகமான வானிலை காரணமாக காற்றின் தரம் மேலும் மேம்படும் என அறிக்கை அளித்திருந்தது.
இதையடுத்து, 'கிராப் -4' எனப்படும் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக் ஷன் பிளான் -4ன் கீழ் விதிக்கப்பட்டு இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
வானிலை
டில்லியில் நேற்று காலை பனிமூட்டம் சூழ்ந்திருந்த நிலையில், வெப்பநிலை குறைந்தபட்சமாக 9.9, அதிகபட்சம் 19 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
காற்றின் தரக் குறியீடு காலை 9:00 மணிக்கு 398 ஆக, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதுவே, நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு 406 ஆக, அபாயகட்டத்தில் இருந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதம் இருந்தது.
அண்டை மாநிலம்
அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சில இடங்களில் மிக லேசான மழை பெய்தது. பத்ரா மாவட்டம் ஹனுமங்கரில் அதிகபட்சமாக 9 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மாநிலத்தின் பல இடங்களில் பனிமூட்டம் நிலவியது. துங்கர்பூரில் வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி, கடுங்குளிர் நிலவியது. பிகானீர் மற்றும் ஜெய்ப்பூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேபோல பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களிலும் கடுங்குளிர் நிலவுகிறது.