டில்லியில் காற்று மாசு உச்சம் : புதிய கட்டடங்கள் கட்ட தடை
டில்லியில் காற்று மாசு உச்சம் : புதிய கட்டடங்கள் கட்ட தடை
ADDED : நவ 14, 2024 09:55 PM

புதுடில்லி: டில்லி காற்று மாசு காரணமாக அனைத்து கட்டட கட்டுமான பணிகள் , மற்றும் கட்டடங்களை இடிக்கும் பணியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குளிர் காலங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றன .
டில்லியில் பெருகி வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை ,மற்றும் தொழிற்சாலைகளால் காற்று மாசு தர குறியீடு அபாய கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் டில்லிவாசிகளுக்கு , மூச்சு திணறல், சுவாச கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
காற்று மாசை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சி.ஏ.க்யூ.எம் எனப்படும், காற்று மாசு தர குறியீட்டு டில்லி ஆணையரகம் இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் டில்லி என்.சி.ஆர், குர்கான், காஸியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களில் பி.எஸ்.-3 ரக பெட்ரோல் வாகனங்கள், பி.எஸ்-4 ரக டீசல் வாகனங்கள் இயக்க தடை விதித்தும், புதிய கட்டுமான கட்டடங்கள் கட்டுவது, கட்டங்களை இடிப்பது போன்ற நடவடிக்ககைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (15.11.2024ம் தேதி) காலை 8 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே டில்லியில் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் விடுமுறை அளித்து, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்திட முதல்வர் ஆதிஷி ஆலோசித்து வருகிறார்.