ADDED : டிச 03, 2024 07:46 AM
பெங்களூரு: மற்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை விட கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்து காணப்பட்டது.
காற்று மாசுபடுவதைத் தவிர்ப்பதற்கு, கர்நாடக அரசு, தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினத்தையொட்டி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, எலக்ட்ரிக் பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
தொழிற்சாலைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம் கர்நாடகாவில் பல இடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு குறைவாகவே உள்ளது என, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கலரபுகி, ஹாவேரி ஆகிய நகரங்களில், காற்றின் தரக்குறியீடு எண் 38 முதல் 42க்குள் தான் இருக்கிறது. இந்த பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள காற்றின் மாசுபாடு அளவை விட, கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசு மிகவும் குறைவாகவே உள்ளது.
ஆனால், பெங்களூரில் காற்றின் தரக்குறியீடு எண் 92 ஆக உள்ளது. காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. பெங்களூரில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம், 1.2 கோடி வாகனங்கள் உள்ளன. வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் புகையினால் காற்று மாசுபடுகிறது.
இதனால் சிலருக்கு சுவாசக் கோளாறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மைசூரு பகுதிகளில் குறைவான வாகனங்கள் உள்ளதால், காற்று மாசுபடும் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளால் காற்று மாசுபடுகிறது.காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு பொதுமக்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவும், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.
காற்று மாசுபாட்டை குறைக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக மாசுகட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.