ADDED : நவ 11, 2024 05:09 AM
பெங்களூரு: கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மைசூரில் தீபாவளியின் போது ஒலி மாசு அளவு குறைந்துள்ளது. சுற்றுப்புற காற்றின் தரமும் மேம்பட்டு உள்ளதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளியின் போது காற்றின் தரக்குறியீடானது, ஹெப்பால்- தொழில் துறை மற்றும் குடியிருப்பு பகுதியில் 23.4 சதவீதமும், கே.ஆர். வட்டம் வணிகப் பகுதி மற்றும் குவெம்பு நகர்- குடியிருப்பு பகுதியில் தலா 12 சதவீதமும் மேம்பட்டுள்ளது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மைசூரு சுற்றுச்சூழல் அதிகாரி வி.எஸ்.குமார் கூறுகையில், ''கடந்த ஆண்டை விட இரைச்சல் அளவு 3 சதவீதம் குறைந்துள்ளது. ஹெப்பாலில் சாதாரண நாளில், கடந்த ஆண்டு 62 டெசிபலாக இருந்த சுற்றுப்புற இரைச்சல் தரம், இந்த ஆண்டு 61.2 டெசிபல்களாக உள்ளது.
''இந்த ஆண்டு மைசூர் உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் தரம் கூடியதற்கு காரணம், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பற்றி ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் பசுமை பட்டாசுகளின் பயன்பாடே,'' என்றார்.