விமானப்படை ஓடுதளத்தை விலை பேசி விற்ற தாய்-மகன்; பஞ்சாப் போலீஸ் அதிர்ச்சி
விமானப்படை ஓடுதளத்தை விலை பேசி விற்ற தாய்-மகன்; பஞ்சாப் போலீஸ் அதிர்ச்சி
ADDED : ஜூலை 02, 2025 08:32 AM

பெரோஸ்பூர்; இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளத்தை தாய், மகன் இருவரும் முறைகேடாக விற்றுள்ள விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.
தமிழ் சினிமாக்களில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை அப்பாவி சிலரிடம் விற்பது போன்ற காட்சிகள் உண்டு. நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்டவை தான் இந்த காட்சிகள் என்றாலும் நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது தான் ஆச்சரியம்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகில் பட்டுவல்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பாகிஸ்தான் எல்லை மிக அருகில் இருக்கிறது. அங்கு ஒரு விமான ஓடுதளம் உள்ளது. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இந்த ஓடுதளம், 1962, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நிகழ்ந்த போர்களின் போது பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
இந்த ஓடுதளம் அமைந்திருக்கும் இடத்தை பஞ்சாபைச் சேர்ந்த உஷான் அன்சால் என்ற பெண்மணியும், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோரும் விற்றுள்ளனர். மாஜி வருவாய்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவரின் புகாரில் பேரில் இந்த விவரம் வெளியாக, இருவரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அறிக்கையில், 1997ல் போலி பத்திரங்கள் மூலம் உஷா அன்சால், நவீன் சந்த் இருவரும் வருவாய்துறை அதிகாரிகள் உதவியுடன் ஓடுதளத்தை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவர் மீது ஜூன் 28ம் தேதி எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. மேலும், டி.எஸ்.பி., கரண் சர்மா தலைமையில் முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது.