ADDED : மே 15, 2025 12:12 AM

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ராணுவ முன்னாள் செயலர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வாணைய தலைவராக இருந்த பிரித்தி சுதன் ஏப்., 29ல் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது.
இதையடுத்து ராணுவ முன்னாள் செயலர் அஜய் குமாரை தேர்வாணைய புதிய தலைவராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஜய் குமார் யு.பி.எஸ்.சி.,யின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
'இவர் 2019, ஆக., 23 முதல் 2022, அக்., 31 வரை ராணுவ செயலராக பணியாற்றியுள்ளார். அஜய் குமார் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பதவியில் இருப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்த இவர், 1985 கேரள கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானவர்.