ADDED : மார் 25, 2025 07:03 AM
புதுடில்லி: மத்திய அரசின் புதிய, நிதித்துறை செயலராக அஜய் சேத் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த, துஹின்காந்த் பாண்டே, 'செபி'யின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்த பொறுப்புக்கு அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, 1987ல் தேர்வான அஜய் சேத், பொருளாதார விவகாரத்துறை செயலராக, 2021 முதல் பணியாற்றினார். அப்போது நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல், பொதுத்துறைகளில் தனியார் பங்களிப்பு, வெளிநாடுகளில் இருந்து வரும் கடன்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை திறம்பட மேற்கொண்டார்.
நிதி பற்றாக்குறையை குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை தீட்டி வரும் நிலையில், மத்திய நிதித்துறை செயலராக அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்கி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற இவர், கூடுதலாக எம்.பி.ஏ., பட்டமும் பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிதி, வரி விதிப்பு மற்றும் சமூக நிர்வாகம் துறைகளில் அனுபவம் பெற்றுள்ள அஜய் சேத், கர்நாடகாவின் வருமான வரி நிர்வாகத்தை மாற்றியமைத்தவர் என்ற பெருமை பெற்றவர்.
நிதித்துறை செயலராக இருந்த துஹின்காந்த் பாண்டே, 'செபி' எனும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதால், அந்த பொறுப்புக்கு நேற்று இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.