மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய அஜித் பட நடிகர் போலீசில் சரண்
மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய அஜித் பட நடிகர் போலீசில் சரண்
ADDED : ஏப் 20, 2025 03:16 AM
திருவனந்தபுரம்: போலீசை கண்டு பயந்து ஓடிய கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நேற்று போலீசில் சரணடைந்தார். விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும்போதையில் நடிகைகளிடம் அத்துமீறுவதாகவும் நடிகை வின்சி அலோஷியஸ் புகார் கூறினார்.
நேற்று முன்தினம் கொச்சியில் இவரிடம் விசாரிக்க தங்கி இருந்த ஓட்டலுக்கு போலீசார் சென்றனர். அப்போது பின்பக்க கதவை திறந்து இரண்டாவது மாடியில் குதித்து தப்பினார்.
நேற்று இவர் போலீசில் சரணடைந்தார். ஓட்டலில் போலீசார் வந்தபோது தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்றும், குண்டர்கள் தாக்க வருவதாக நினைத்து தப்பி ஓடியதாகவும் கூறினார்.
அவர் மீது போலீசார் எப். ஐ. ஆர். பதிவு செய்தனர். அதில் முதல் நபராக ஷைன் டாம் சாக்கோ, இரண்டாம் நபராக இவருடன் அறையில் இருந்த மலப்புறம் வளவனூர் பகுதியைச் சேர்ந்த அகமது முர்ஷாத் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடியது போதைப்பொருள் தடயங்களை அழிப்பதற்காக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று இவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். இவர் போதைப் பொருள் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டறிய ரத்தம், நகம், தலைமுடி சாம்பிள் எடுக்கப்பட்டது. பின்னர் பெற்றோரின் ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். நாளை இவர் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் கேரள போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் சஜீர் என்பவருடன் சாக்கோவுக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சஜீருக்கு இவர் இணைய வழியாக பணம் அனுப்பிய விபரங்களும் போலீசுக்கு கிடைத்துள்ளது.
மேலும் உயர்ரக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலப்புழை தஸ்லீமா சுல்தானுடனும் இவருக்கு தொடர்பு இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

