எதிரி ஏவுகணையை வானில் சிதறடிக்கும் ஆகாஷ்! கட்டுப்பாடு எல்லைக்கோட்டில் கவசமாக நிற்கிறது
எதிரி ஏவுகணையை வானில் சிதறடிக்கும் ஆகாஷ்! கட்டுப்பாடு எல்லைக்கோட்டில் கவசமாக நிற்கிறது
ADDED : மே 10, 2025 07:55 AM

கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை முறியடிப்பதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை முக்கிய பங்காற்றியுள்ளது.
தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி ஏவுகணைகளை தகர்க்கும், வான் பாதுகாப்பு அமைப்பு ஆகாஷ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாடு எல்லைக்கோடு பகுதியில் நடத்திய தொடர்ச்சியான, ட்ரோன் தாக்குதல்களை தடுப்பதில், ஆகாஷ் ஏவுகணை தடுப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்திய ராணுவமும், விமானப்படையும், பாக்., எல்லையில், இந்த ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ளன.
இந்த குறுகிய துார, தரையிலிருந்து பாய்ந்து செல்லும் ஏவுகணை, வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து, கவசமாக இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது வெவ்வேறு நிலப்பரப்புகளில், எளிதாக நகர்ந்து சென்று தாக்கக்கூடியது.
எதிரி விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் எளிதில் வீழ்த்தி, குறிப்பிட்ட நிலப்பரப்பை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். நிகழ்நேர, மல்டி-சென்சார் தரவுகளின்படி இது தானியங்கி முறையில் செயல்படுகிறது.
எதிரி ஏவுகணை எத்தகைய அச்சுறுத்தல் கொண்டது என்பதை எளிதில் மதிப்பிடுகிறது.
ஒரே நேரத்தில், பல்வேறு திசைகளில் பல அச்சுறுத்தல்கள் வந்தாலும், அவற்றை கண்டறிந்து குறிவைக்க, உதவுகிறது.