மஹா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்
மஹா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: சொல்கிறார் அகிலேஷ் யாதவ்
ADDED : பிப் 15, 2025 07:09 PM

லக்னோ: முதியவர்கள் புனித நீராடுவதற்காக, மஹா கும்பமேளா நடக்கும் நாட்களை நீட்டிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 14ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று வரை 50 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், நிருபர்களிடம் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: பிரயாக்ராஜ் நகரில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியிருக்கும். ஆனால், மாநில அரசு குறைவாகச் சொல்கிறது. வேண்டுமென்றே இதைச் செய்கின்றனர். எதிர்காலத்தில் அரசின் நிர்வாகத்தை படிக்கும் போது, அவர்களின் தோல்வி வெளிப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கும்பமேளாவில் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால், பல காரணங்களினால், அவர்களால் பங்கேற்க முடியவில்லை. ஒரு காலத்தில் கும்பமேளா 75 நாட்கள் நடந்தது.மன்னர் ஹர்ஷ்வர்தன் ஆட்சியின் போது, கும்பமேளா நீண்ட நாட்கள் என்ற சாதனை உள்ளது.எனவே,இம்முறை முதியவர்களின் நலன் கருதி கும்பமேளா நடக்கும் நாட்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

