இந்தியா மீது போர் தொடுக்க பாக்.,கிற்கு அழைப்பு விடுத்த அல் - குவைதா ஆதரவு பெண்
இந்தியா மீது போர் தொடுக்க பாக்.,கிற்கு அழைப்பு விடுத்த அல் - குவைதா ஆதரவு பெண்
ADDED : ஆக 08, 2025 12:36 AM

ஆமதாபாத்: அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் பெண், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிருக்கு அழைப்பு விடுத்தது தெரியவந்துள்ளது.
அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கடந்த மாதம் 22ம் தேதி கைது செய்தனர்.
கைது
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த ஷாமா பர்வீன் அன்சாரி, 30, என்ற பெண்ணுக்கு, அல் - குவைதா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் தன் சகோதரருடன் வசித்து வந்த அவரை, கடந்த மாதம் 31ம் தேதி குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
அல் - குவைதாவின் செயல்பாடுகள் அடங்கிய, 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில் பகிர்ந்ததுடன், பயங்கரவாத ஆதரவு கருத்துகளை வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
ஷாமா பர்வீனிடம் இருந்து, மொபைல் போன், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஷாமாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியை சோதித்ததில், பயங்கரவாத செயல்களை அவர் ஊக்குவித்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடந்த மே மாதம், பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம் மேற்கொண்ட, 'ஆப்பரேஷன் சிந்---------------துார்' நடவடிக்கையின் போது, இந்தியா மீது போர் தொடுக்க அந்நாட்டிற்கு இவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாக்., ராணுவ தளபதி அசீம் முனிரை இணைத்து ஷாமா வெளியிட்ட பதிவில், 'உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. இஸ்லாமை செயல்படுத்த கிலாபத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; முஸ்லிம் நிலங்களை ஒன்றிணைத்து, ஹிந்துத்துவா மற்றும் சியோனிசத்தை ஒழிக்க முன்னேறுங்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில், அல் - குவைதா தலைவர் ஒருவர் பேசும் வீடியோவை ஷாமா பகிர்ந்துள்ளார்.
களங்கம்
அதில் அவர், இந்தியாவுக்கு எதிராகவும், ஹிந்து சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் கருத்துகளை பேசியுள்ளார்.
இந்த வீடியோக்கள் தொடர்பாக, ஷாமாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அல் - குவைதா அமைப்புடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.