UPDATED : ஜூன் 26, 2024 11:58 PM
ADDED : ஜூன் 26, 2024 11:55 PM

புதுடில்லி : பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சபாநாயகர் தேர்தல், கிளைமாக்ஸ் இல்லாத சினிமா போல அமைதியாக முடிந்தது. அதிகமான எம்.பி.,க்கள் 'ஆம்' சொன்னதாக கூறி, பா.ஜ., வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக இடைக்கால சபாநாயகர் அறிவிக்க, பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் அவரை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள சூழலில், லோக்சபா சபாநாயகர் பதவி முன் எப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றுஉள்ளது.
ஓம் பிர்லாவையே மீண்டும் அந்த நாற்காலியில் அமர்த்த பிரதமர் மோடி தீர்மானித்தார். பிர்லா வருவதை இண்டியா கூட்டணி விரும்பவில்லை. ஐந்து ஆண்டுகளாக அவர் நடுநிலை தவறி, ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டார் என்பது அவர்களின் அதிருப்திக்கு காரணம்.
நிபந்தனை
எனவே, வழக்கத்துக்கு மாறாக, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தது. மோடி அதை விரும்பவில்லை. சபாநாயகர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என எதிர்பார்த்தார்.
போட்டி வந்தாலும், பிர்லாவை ஜெயிக்க வைக்கும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம் இருந்தது. எனினும், போட்டியை தவிர்க்க இண்டியா அணியுடன் மோடியின் துாதர்கள் பேச்சு நடத்தினர்.
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு தர சம்மதித்தால், போட்டி இல்லாமல் பிர்லாவை சபாநாயகராக்க தயார் என இண்டியா அணி நிபந்தனை விதித்தது. அதை மோடி ஏற்கவில்லை.
எனவே, கே.சுரேஷ் என்ற கேரள எம்.பி.,யை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் நீங்கலாக மற்ற எதிர்க்கட்சிகள் சுரேஷை ஆதரிப்பதாக அறிவித்தன. ஆளும் கூட்டணியை சேர்ந்த சில உறுப்பினர்களே சுரேஷுக்கு ஆதரவாக ஓட்டு போடுவர் என்று ஒரு தகவல் பரப்பப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
நேற்று காலை 11:00 மணிக்கு தேர்தல் துவங்கியது. ஓம் பிர்லாவை சபாநாயகர் பதவிக்கு முன்னிறுத்தும் தீர்மானத்தை, பிரதமர் நரேந்திர மோடி வாசித்தார். உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தால், பட்டனை அழுத்தி ஓட்டுப் பதிவு செய்யும் நடைமுறை கிடையாது என இடைக்கால சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் அறிவித்தார்; குரல் ஓட்டு மூலமே தேர்தல் நடக்கும் என்றார்.
மக்களின் குரல்
மோடியின் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என குரல் கொடுக்க வேண்டும்; எதிர்ப்பவர்கள் இல்லை என குரல் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆளும் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆம் என குரல் எழுப்பினர்.
எதிர்க்கட்சி தரப்பில் இல்லை என குரல் கொடுத்தனர். ''ஆம் என்ற குரலே அதிகம் ஒலித்ததால், ஓம் பிர்லா வெற்றி பெற்றார்,'' என மஹதப் அறிவித்தார்.
பொதுவான குரல் ஓட்டெடுப்பு நடத்தாமல், டிவிஷன் எனப்படும் தனிநபர் ஓட்டுப் பதிவு செய்யும் முறையை இண்டியா கூட்டணி வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எந்த கட்சியுமே அதை வலியுறுத்தவில்லை. இதனால், எந்த சலசலப்பும் இல்லாமல், பிரச்னை முடிவுக்கு வந்தது.
பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் பிர்லாவை அழைத்து சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் ரிஜிஜுவும் உடன் சென்றார்.
''பிர்லா கடந்த முறையை போலவே, இந்த முறையும் சபையை தன் புன்னகையால் சிறப்பாக நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. சபையின் மாண்பை பாதுகாப்பதில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் அவருடைய அனுபவம் இளம் உறுப்பினர்களுக்கு பாடமாக இருக்கும்,'' என பிரதமர் குறிப்பிட்டார்.
''எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் தான். எனவே, இந்த முறை மக்களின் குரல் இந்த சபையில் ஒலிக்க போதுமான வாய்ப்புகளை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். சபையை சுமுகமாக நடத்த, நம்பிக்கை அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்,'' என எதிர்க்கட்சி தலைவர் சொன்னார்.
தேர்தல் புதிதல்ல
சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை என வெளியான செய்திகள் தவறானது என தெரியவந்துள்ளது.கடந்த 1952, 1967, 1976 ஆகிய ஆண்டுகளில் லோக்சபாவில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்துள்ளது என ஆவணங்கள் காட்டுகின்றன.
நேரு பிரதமராக இருந்த முதல் நிகழ்விலும், இந்திரா பிரதமராக இருந்த மூன்றாவது நிகழ்விலும் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் முறையே 55 மற்றும் 58 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தனர்.
இரண்டாவது நிகழ்வில் இந்திராவின் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு 278 ஓட்டுகளும், எதிர்த்து நின்ற தென்னட்டி விஸ்வநாதனுக்கு 207 ஓட்டுகளும் கிடைத்தன. அதுபோன்ற போட்டியை இண்டியா அணி எதிர்பார்த்தது. ஆனால் எண்ணிக்கை சாதகமாக இல்லை.