அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
ADDED : ஜூலை 20, 2025 10:03 PM

ஸ்ரீநகர்: கடந்த ஜூலை 3ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில், இதுவரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அமர்நாத் யாத்திரை 2025 ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடைகிறது. இந்த புனித யாத்திரை 37 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளதாவது:
இம்மாதம் 3ம் தேதி யாத்திரை தொடங்கியதிலிருந்து புனித குகை ஆலயத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
இந்த புனித பயணம் மிகவும் வளமான அனுபவம். பாபாவின் ஆசீர்வாதங்கள் அனைவருக்கும் அமைதி, வலிமை மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும்.
இவ்வாறு மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளார்.